‘எங்களை அடிச்சது விவசாயிகள் இல்ல, அடியாட்கள்தான்’!.. காயமடைந்த டெல்லி போலீசார் ‘பரபரப்பு’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தங்களை தாக்கியது அடியாட்கள்தான் காயம்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஜனவரி 26ம் தேதி மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற்றது. அனுமதி வழங்கப்பட்ட வழிகளில் விவசாயிகள் பேரணி நடத்திய நிலையில், சிலர் மட்டும் அனுமதியின்றி செங்கோட்டையை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அங்கு வன்முறை வெடித்தது.
இந்த சம்பவம் குறித்து தெரிவித்த பெண் காவலர் ரேகா குமாரி, ‘கலவரத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அடைக்கலம் அடைந்தனர். நானும் என்னை தற்காத்துக் கொள்ள முயன்றேன். நான் க்ரில் கேட்டை தாண்ட முயன்றபோது, அது சரிந்து என் மீது விழுந்தது. என்னை காப்பாற்றுமாறு கதறிய போதும் காவலர்கள் அவர்களை காத்துக் கொள்ளவே முயன்றனர். பத்து நிமிடங்களுக்கு பிறகுதான் சில காவலர்கள் வந்து என்னை மீட்டனர்’ என தெரிவித்துள்ளார்.
வன்முறை குறித்து கூறிய காவலர் சந்தீப் குமார், ‘செங்கோட்டையில் சிக்கியிருந்தவர்களை மீட்டபோது திடீரென கலவரக்காரர்கள் புகுந்து பணியில் இருந்த காவலர்களை கையில் கிடைப்பதை கொண்டு தாக்கினர். அப்போதுதான் நான் காயமடைந்தேன்’ என கூறியுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் ஜோகிந்தர் ராஜ் கூறுகையில், ‘நான் எனது பணியில் நிறைய போராட்டங்களையும், கலவரங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால் இதை போல ஒன்றை சந்தித்ததே இல்லை. என்னை எந்த பக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்பது கூட தெரியவில்லை. முதுகு, தோள்பட்டை மற்றும் கைகளில் என்னை கடுமையாக தாக்கினார்கள். என்னை வாளால் வெட்ட முயன்ற போதுதான் அங்கிருந்து தப்பினேன். இருப்பினும் தொடர்ந்து எங்கள் மீது கற்களை வீசினர்’ என கூறியுள்ளார்.
இந்த வன்முறையில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். இதில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 25 முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடியை ஏற்றிய நடிகர் தீப் சித் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தீப் சித்து, 2015-ம் ஆண்டில் வெளியான பஞ்சாபி மொழி படம் ஒன்றில் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதனை அடுத்து 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்தி நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார்.
அதேபோல் தங்களது போராட்டத்தின் தொடக்கத்திலிருந்து நடிகர் தீப் சித்து கலந்துகொள்ளவில்லை என்று விவசாயிகள் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். சம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின்போது, அவரது நடவடிக்கைகளைப் பார்த்து உடனே நீக்கினோம் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் சன்னி தியோலுடன் தீப் சித்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
News Credits: The Quint
மற்ற செய்திகள்