சிவபெருமானின் அவதாரம்... மூன்று கண்களுடன் பிறந்த அதிசய 'கன்றுக்குட்டி' - வழிபடும் மக்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கர் மாநிலம் ராஜ்னந்கானில் மூன்று கண்களுடன் பிறந்த கன்றுகுட்டியை சிவபெருமானின் அவதாரம் என வர்ணித்து அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்னந்கான் மாவட்டம் நவகான் லோதி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த் சந்தேல். விவசாயியான இவர் ஜெர்சி பசுக்களை வளர்த்து வருகிறார். கடந்த 13-ம் தேதி ஜெர்சி பசு பெண் கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டி 3 கண்களுடனும், நாசியில் நான்கு துளைகளுடனும் பிறந்ததால் விவசாயி ஹேமந்த் சந்தேலுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியும் ஏற்பட்டது.
விவசாயி ஹேமந்த் சந்தேல்
இதுகுறித்து ஹேமந்த் சந்தேல் கூறியதாவது, இதை பார்த்ததும் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. கன்றுக்குட்டியின் வால் வித்தியாசமாக உள்ளது. அதன் நாக்கும் சாதாரண கன்றுகளை விட நீளமாக இருக்கிறது. 'கால்நடை மருத்துவர் இந்த கன்றுக்குட்டியை பார்வையிட்டு நலமாக இருப்பதாக தெரிவித்தார். நீளமான நாக்கு காரணமாக, பசுவிடம் பால் குடிப்பதில் கன்றுக்குட்டி சிரமத்தை எதிர்கொள்கிறது. நாங்கள் அதற்கு உணவளிக்க உதவுகிறோம்' என்றும் விவசாயி ஹேமந்த் சந்தேல் தெரிவித்தார். அபூர்வ உடலமைப்புடன் பிறந்த கன்றுக்குட்டி நவகான் லோதி கிராமம் முழுவதும் பிரபலமாகி விட்டது.
மருத்துவர்
இந்த அதிசய கன்றுகுட்டி குறித்து கால்நடை மருத்துவர் கூறுகையில், இதனை அதிசயமாக கருத வேண்டாம். கருவின் அசாதாரண வளர்ச்சியால் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. இதுபோன்ற கன்றுகள் ஆரோக்கியத்தில் பலவீனமாக இருக்கும். இதுபோன்ற சம்பவங்களை நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கையுடன் மக்கள் தொடர்புபடுத்தக்கூடாது. பல சம்பவங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து, விழிப்புணர்வு இல்லாததால், இதுபோன்ற குறைபாடுகள் உள்ள விலங்குகளை வழிபடுவது பல சம்பவங்களில் காணப்படுகிறது. விலங்குகள் தங்கள் கால்நடைகளை சரியாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சிவபெருமான் அவதாரம்
இருப்பினும் இந்த செய்தியை கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராமத்தினர் பலரும் அதிசய கன்றுக்குட்டியினை வந்து பார்த்து செல்கின்றனர். ஒரு சிலர் இதனை சிவபெருமானின் அவதாரம் என்று கூறி தேங்காய் வாழைப்பழத்துடன் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இதே போல் சம்பவம் ஒடிசாவின் நப்ரங்க்பூரில் இரண்டு தலை மூன்று கண்களுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி குறித்த செய்தி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. அதனையும் கடவுளுடன் ஒப்பிட்டு வழிபாடு நடத்தினர்.
மற்ற செய்திகள்