‘உருமாறிய வீரியமிக்க கொரோனா வைரஸ்'... 'இந்தியாவில் டிசம்பருக்கு முன்னரே’... ‘ஆனாலும் இதற்கு வாய்ப்பு குறைவு’... ‘டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் டிசம்பர் மாதத்திற்கு முன்னரே இந்தியாவில் நுழைந்திருக்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது, ‘கொரோனா வைரஸ் பல்வேறு இடங்களில் சில மாற்றங்களுக்கும், உருமாறிய நிலைக்கும் உட்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரசுக்கு நாம் கவலைப்படுவதற்கு காரணம் என்னவென்றால் முதல் நிலை கொரோனா வைரஸை விட இது விரைவாக பரவுகிறது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் முதன்முதலில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடித்ததாக கூறப்பட்டது. இந்தியாவில் டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக உருமாறிய கொரோனா உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக நவம்பரில் கூட இந்த வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து இருக்கலாம். இது பற்றி ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஹாலந்தில் சிலர் அந்த வைரசால் பாதிக்கபட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் இந்த வைரஸ் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் இந்தியாவில் நுழைந்திருக்கலாம். புதிய உருமாறிய வைரசால் இதுவரை அதிகமானோர் பாதிக்கப்படவில்லை.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. ஆனாலும் புதிய வைரஸ் வேகமாக பரவக்கூடும் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எச்சரிக்கையில் மெத்தனம் காட்டினால் ஏராளமான மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாக நேரிடும். கடந்த 4 முதல் 6 வாரங்களாக இந்தியாவின் தரவை பார்த்தால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா குறைந்து வருகிறது. இதனால் உருமாறிய கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சாத்தியமில்லை. ஆனால் நாம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உருமாறிய கொரோனா வைரஸை நாட்டில் பெரிய அளவில் வர விடமாட்டோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசியைப் பொருத்தவரை நாட்டில் ஒரு வலுவான திட்டம் உள்ளது. தடுப்பூசி குறித்து இப்போது, எங்களிடம் ஒரு தரவு உள்ளது. மேலும் இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் நல்ல செய்தி. இந்த தடுப்பூசியை இந்திய சீரம் நிறுவனம் உருவாக்கி வருகிறது. தரவுகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்பித்தவுடன் சில நாட்களுக்குள் தடுப்பூசிக்கான ஒப்புதலைப் பெற முடியும்’ என அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்