"வீட்டுவேலை செய்ய முடியாதுனா மணமகள் கல்யாணத்துக்கு முன்பே மாப்பிள்ளையிடம் சொல்லணும்".. மும்பை நீதிமன்றம் பரபரப்பு கருத்து..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர மாநிலத்தில் கணவன் குடும்பத்தினர் தன்னை சரியாக நடத்தவில்லை என காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். இதனிடையே இந்த வழக்கு விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள பாக்யநகர் காவல் நிலையத்தில் பெண்மணி ஒருவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார். அதில் தனது கணவர் வீட்டார் திருமணமான ஒரு மாதத்திற்கு தன்னை சரியாக நடத்தினர் என்றும், அதன்பிறகு வேலைக்காரியை போல நடத்தியதாகவும் அந்த பெண்மணி குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து, ஐபிசி 498A வின் கீழ் கணவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபா கன்கன்வாடி மற்றும் ராஜேஷ் பாட்டீல் அடங்கிய அமர்வு இதுகுறித்த இருதரப்பினர் விளக்கத்தையும் கேட்டறிந்தனர். அப்போது, தன்னை வேலைக்காரி போல நடத்தியதாக அந்த பெண்மணி தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து பேசிய நீதிபதிகள்,"திருமணமான ஒரு பெண்ணை குடும்பத்தின் நோக்கத்திற்காக கண்டிப்பாக வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வதாலேயே, அவரை வீட்டு பணியாளர் என்று சொல்ல முடியாது. ஒருவேளை அதில் அந்த பெண்மணிக்கு விருப்பம் இல்லை என்றால், அதனை திருமணத்திற்கு முன்பே மணமகனிடத்தில் கூறியிருக்க வேண்டும். அப்போதுதான் திருமணத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்ய அல்லது திருமணத்திற்கு முன்பே விஷயத்தை தீர்த்துக்கொள்ள மணமகனுக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்றனர்.
மேலும், கணவர் மற்றும் அவருடைய உறவினர்கள் கார் வாங்குவதற்காக 4 லட்ச ரூபாய் தரும்படி தனது தந்தையிடம் கேட்டதாகவும், கிடைக்கவில்லை என்பதால் தன்னை தாக்கியதாகவும் பெண்மணி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து கணவரிடம் விசாரிக்கப்பட்ட போது அவர், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். மேலும், அந்த பெண்மணி ஏற்கனவே திருமணமானவர் என்றும், முதல் கணவர் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்ததாகவும் அந்த வழக்கில் அவரது முதல் கணவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அப்போது இதுகுறித்து பேசிய, நீதிபதிகள் பெண்மணியின் முதல் திருமணம் பற்றி பேசுவது இந்த விவகாரத்திற்கு சம்மதம் இல்லாதது. அதே வேளையில், மனைவி தனது கணவர் மீது சுமத்தியுள்ள புகார்களுக்கு போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி மனைவியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
மற்ற செய்திகள்