'ஹைஃபை, ஹக்ஸ், ஹான்ட்ஷேக்'... மாணவர்களை அன்புடன் வரவேற்கும் ஆசிரியை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாணவர்களை வகுப்பு துவங்குவதற்கு முன் அன்புடன் அரவணைத்து வரவேற்கும் ஆசிரியரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'ஹைஃபை, ஹக்ஸ், ஹான்ட்ஷேக்'... மாணவர்களை அன்புடன் வரவேற்கும் ஆசிரியை!

ஒரு பள்ளியில் இருக்கும் சுவரில் நான்கு குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. அவை ஹை ஃபை, ஹார்ட் (இதயம்), ஃபிஸ்ட் பம்ப்  (சிறிய அடி), ஹாண்ட் சேக் (கை குலுக்குவது).  பள்ளிக்கு வரும் மாணவர்கள், வகுப்புக்குள் நுழைவதற்கு முன் அங்கு வரையப்பட்டுள்ள குறியீடுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் குறியீட்டை ஆசியர்கள் மாணவர்களுக்குச் செய்வார்.

உதாரணமாக, மாணவர் ஹார்ட் குறியீட்டைத் தேர்ந்தெடுத்தால்,  ஆசிரியர் மாணவரை அரவணைத்துக்கொள்வார். ஹைஃபை குறியீட்டை தொட்டால் மாணவருக்கு ஆசிரியர் ஹைஃபை செய்வார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆசிரியரின் இந்த வீடியோ வைரலாகியது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் தெலுங்கானாவிலும் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி என்ற மாவட்டத்தில் சமூக நலன் கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இதன் முதல்வரான ரூபா, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆசிரியரின் வீடியோவைப் பார்த்து கவரப்பட்டுள்ளார். பின்னர், கோடை விடுமுறையில் நடைபெற்ற முகாமுக்குப் பள்ளி மாணவர்களை இதேபோன்ற முறையில் முதல்வர் ரூபா வரவேற்றுள்ளார்.

இது பற்றி முதல்வர் ரூபா கூறியதாவது, 'இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள். அவர்களுக்கு, குடும்பச் சூழல், வறுமை என நிறையப் பிரச்னைகள் இருக்கும்.  அதை அவர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் மாட்டார்கள். ஆனால் நான் அவர்களை அரவணைத்தப் பிறகு பல மாணவர்கள் அழுது விட்டார்கள். அவர்களால் தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. அந்த நாள் எனக்கும் உணர்ச்சிவசமாகவே இருந்தது.

நாங்கள் இதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றினோம். அதைப் பார்த்த கல்வித் துறை செயலர் இந்த நடவடிக்கையை அனைத்து பள்ளிகளும் நடைமுறைப்படுத்த யோசிக்கிறோம் எனக் கூறினார். காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இதே போன்ற பாசிட்டிவ்வான வரவேற்பு இருந்தால் அவர்களின் நாள் எவ்வளவு இனிதாக இருக்கும். இதனால் மாணவர்களின் மதிப்பெண்களும் உயரும்' எனத் தெரிவித்துள்ளார்.

HIFI, HANDSHAKE, HUGS, FISTPUMP, TEACHER, STUDDENT, TELANGANA