‘இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்’! ‘4 பேர் என்கவுண்டர் சம்பவம்’.. பெண் மருத்துவரின் தங்கை உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் மருத்துவரை எரித்துக்கொலை செய்த குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக மருத்துவரின் தங்கை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷாத்நகர் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதனிடையே நான்கு பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக இன்று (06.12.2019) அதிகாலை சம்பவம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்ட போலீசார் கூறியுள்ளனர். அப்போது நால்வரும் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அதனால் நான்குபேர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்தினர், நான்கு பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தெரிவித்த மருத்துவரின் தங்கை, இந்த என்கவுண்டர் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். போலீசாருக்கும், ஊடகத்திற்கும் நன்றி. எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.