தத்தெடுத்த மகளுக்கு ‘தந்தை’ ஸ்தானத்தில் கடமையை செய்த தெலுங்கானா முதல்வர்.. வெளியான ‘உருக்கமான’ பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதத்தெடுத்த மகளுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வெகுவிமர்சையாக திருமணம் செய்து வைத்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண், தனது சித்தி மற்றும் தந்தையால் துன்புறுத்தப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பின. இதனை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டார். அதன்படி இளம்பெண் பிரதியுஷாவை அதிகாரிகள் மீட்டனர்.
அப்போது சித்தி மற்றும் தந்தையின் கொடுமையால், பிரதியுஷாவின் உடலில் சூடுப்பட்ட காயங்கள், கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சித்தி ஷியாமளா, தந்தை ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மிகவும் மோசமான நிலையில் இருந்த பிரதியுஷாவை, முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது மனைவி ஷோபா, மகள் கவிதா ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். பின்னர் பிரதியுஷாவை அரசு காப்பகத்தில் சேர்த்து அனைத்து உதவிகளையும் செய்தனர்.
இதனை அடுத்த சில நாட்களில், ‘எனக்கு மகள் கவுதா இருக்கிறார். ஆனாலும் பிரதியுஷாவை இன்னொரு மகளாக தத்தெடுக்கிறேன்’ என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். கடந்த 5 வருடங்களாக பிரதியுஷாவை சந்திரசேகர் ராவ் படிக்க வைத்தார். செவிலியர் படிப்பை முடித்த பிரதியுஷா தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மகள் பிரதியுஷாவுக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தார். அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தை சேர்ந்த ஐடி பொறியாளர் சரண் என்பவரை மகள் பிரதியுஷாவுக்கு நிச்சயம் முடித்தார்.
இதனை அடுத்து நேற்று பிரதியுஷா-சரண் திருமணம் ஹைதராபாத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. பிரதியுஷா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், பட்டிகடா பகுதியில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முந்தைய நாள் நடந்த சடங்குகளில் முதல்வரின் மனைவி ஷோபா பிரதியுஷாவுக்கு நகைகளை அணிவித்தார். தந்தை ஸ்தானத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தத்தெடுத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்