'கழுத்தளவு தண்ணீர்.. ஆனாலும் கல்விச் சேவைய ஒருநாளும் நிறுத்துனது இல்ல'.. 'ஒருநாள் தவறி விழுந்து'.. சல்யூட் அடிக்க வைத்த ஆசிரியை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில் உள்ளது ரதியபலா தொடக்கப் பள்ளி. இங்கு ஒப்பந்த ஊதிய அடிப்படையில், நியமிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் ஒருவர்தான் ஆசிரியை பினோதினி சமல்.
2008-ஆம் ஆண்டு ரதியபலா பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்த பினோதினி சமல் எனும் இந்த 49 வயது பெண்மணி, குழந்தைகளின் கல்விச் சேவைக்காக திருமணம் கூட செய்துகொள்ளாமல், தன் அண்ணன் வீட்டில் இருந்து தினமும் 3 கிலோ மீட்டர் நடந்து வந்து, அங்குள்ள சபுவா நதியைக் கடந்து பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார். மழை காலங்களில் நதியோடு சேர்ந்து தண்ணீர் பெருகி ஓடுவதோடு, வெயில் காலங்களில் ஓரளவேனும் தண்ணீர் வற்றிப் போயிருக்கும். அப்போது போக்குவரத்து கொஞ்சம் எளிதானதாக இருக்கும்.
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான, 53 மாணவர்களுக்கு ஆசிரியையாக இருக்கும் பினோதினி சமல், எத்தனை மழை, இடி, புயல், வெள்ளம் வந்தபோதிலும் ஒருநாள் கூட விடுப்பு எடுத்திராமல், மாணவர்களுக்கு தங்கு தடையில்லாத கல்வியைக் கொடுக்கும் நோக்கில், கழுத்தளவு ஆழத்திலும் நதியைக் கடந்து செல்கிறார். இந்த நதியின் மேல் பாலம் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு ஆனால் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடும் பினோதினி, தனக்கு இதைவிட்டால் வேறென்ன வேலை என்பதால் தினமும் பள்ளிக்குச் சென்றுவிடுவதாகத் தெரிவிக்கிறார்.
எப்போதும் ஒரு மாற்றுப் புடவையுடன் நதியைக் கடக்கும்போது, தனது செல்போன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு பைக்குள் வைத்துக்கொண்டு, நதியைக் கடந்தவுடன் சென்று பள்ளிச் சீருடைக்கான புடவையை, பள்ளியில் சென்று மாற்றிக்கொள்வதும் பினோதினியின் வழக்கம். அப்படி இருந்தும் பல முறை நதியைக் கடக்கும்போது தவறி விழும் அபாயத்தைச் சந்தித்திருப்பதாகவும் கூறி அதிரவைத்துள்ளார்.