'ஆசையாய் வாங்கிய புத்தம் புதிய டாடா ஹாரியர் கார்'... 'கூகிள் மேப்பை நம்பி கண்மூடித்தனமாக இரவில் பயணம்'... எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகூகிள் மேப்ஸ் பல வகைகளில் உபயோகமாக உள்ள நிலையில், அதை மட்டுமே நம்பி சென்றால் எது மாதிரியான சிக்கல்கள் வரும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.
இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ, முகவரி தெரியாத இடத்திற்குச் செல்லும் போது நாம் பெரும்பாலும் நாடுவது கூகிள் மேப்களை தான். நகரங்களில் டிராபிக் எப்படி இருக்கிறது, எந்த வழியாகச் சென்றால் எளிதாக நாம் சேர வேண்டிய இடத்திற்குச் செல்லலாம் போன்ற விவரங்களைத் தெளிவாகக் காட்டுவதில் கூகிள் மேப் கில்லாடி என்றே சொல்லாம். ஆனால் என்னைப் போன்று யாரும் கூகிள் மேப்பை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் என விவரித்துள்ளார் புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
புனேவை சேர்ந்த இளைஞர் ஒருவர் புத்தம் புதிய டாடா ஹாரியர் காரை வாங்கியுள்ளார். பின்னர் தனது பெற்றோருடன் புனேவிலிருந்து ஜபல்பூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த இளைஞர் இப்போது தான் முதல் முறையாக இதுபோன்ற பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்பதால், கூகிள் மேப் உதவியுடன் செல்லலாம் எனத் திட்டம் போட்டு தனது பயணத்தைத் தொடங்கினார். காலை 9 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், நீண்ட பயணம் என்பதால் நாக்பூரில் காரை நிறுத்தி ஓய்வெடுக்கத் திட்டம் வைத்திருந்தார்.
கூகிள் மேப்ஸின் தகவல் படி, அவர் அன்றிரவு 11 மணிக்குள் அவர் இலக்கை அடைந்து விடுவார் எனக் கூகிள் மேப் காட்டியுள்ளது. அதனை நம்பிய அவர் கூகிள் மேப்ஸ் வழியை மாற்றிக் காட்டியபோதும் அதன் வழியிலேயே சென்று கொண்டிருந்தார். விரைவான வழி என்று கூகிள் மேப்ஸ் ரூட்டை மாற்றிக் காட்ட, இவரும் கண்மூடித்தனமாக அந்த பாதையில் பயணித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அமராவதிக்கு அருகிலுள்ள பிரதான சாலையிலிருந்து திசை திருப்பப்பட்டு, இருண்ட மற்றும் குறுகிய சாலை கொண்ட மோசமான பாதையில் அவரை செல்லும்படி கூகிள் மேப்ஸ் வழி நடத்தியுள்ளது. அவர் சற்றும் யோசிக்காமல் அதே வழியில் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் கூகிள் மேப் காட்டிய வழியானது மோசமான சாலைகள் மற்றும் சேதமடைந்த பாலம் வழியாகச் சென்றுள்ளது. ஒரு மணி நேரத்தில் சுமார் 20 கி.மீ தூரத்தைக் கடந்த பிறகு அந்த வழியிலிருந்த மற்றொரு பாலம் மிகவும் சேதமடைந்திருப்பதை அவர் கவனித்துள்ளார். அப்போது சேதமடைந்த பாலத்தின் இடதுபுறத்திலிருந்த வழியில் கார் சென்றபோது காரின் டயர்களில் பிடிப்பு இழந்து, வாகனம் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டது. அப்போது மணி அதிகாலை 2.30. அந்த பகுதியில் உதவக் கூட யாரும் இல்லாத நிலையில், 30 நிமிடங்கள் கார் அந்த பள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் நின்று கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் காரின் எஞ்சின் சூடாகிப் புகை வந்தது. பின்னர் கிளட்ச் எரியும் வாசனையும் வந்திருக்கிறது. அதோடு ஹெட்லேம்ப்களும் வேலை செய்யாமல் போனது. சுற்றி கடும் இருள் சூழ்ந்திருந்த நிலையில், வேறு வழியில்லாமல் 'Roadside Assistance'க்கு போன் செய்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அவர்கள் 70 கிலோ மீட்டர் பயணம் செய்து கார் சிக்கி கொண்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். பின்னர் அவர்கள் உதவியுடன் காரை வெளியில் கொண்டு வந்து, ஹெட்லேம்ப் இல்லாமல் நகரத்திற்குள் காரை கொண்டு வந்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை குறித்து விவரித்துள்ள அந்த இளைஞர், யாரும் என்னைப் போன்று கண்மூடித்தனமாகக் கூகிள் மேப்பை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார். நகரத்திற்குள் கூகிள் மேப் சரியான பாதையைக் காட்டுகிறது. ஆனால் இதுபோன்று நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது முறையான தயாரிப்போடு பயணத்தை மேற்கொள்ளுங்கள். முழுமையாகக் கூகிள் மேப்ஸை நம்பி, கண்மூடித்தனமாகப் பயணம் மேற்கொண்டு என்னைப் போன்று சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் எனச் சோகத்துடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்