1. பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு சொந்த மாநிலம் சென்றுள்ள அவர் பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார்.
2. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் அவரது இரண்டு நினைவுப் பரிசுகளான வெள்ளிக்கலசம் மற்றும் மோடியின் புகைப்படம் தலா ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
3. தமிழகத்தில் தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மத மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்த பெரியாரின் 141வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
4. நிலவைச் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசாவின் LRO எனப்படும் ஆர்பிட்டர் இன்று நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கடந்து செல்கிறது. அப்போது நாசாவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை எடுக்கும் புகைப்படங்கள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
6. கோவை அருகே கருணாநிதி நகரில் சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆதரவற்ற 3 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆதரவற்ற சிறுமிகளை வீட்டில் அடைத்து வைத்திருந்த 3 இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7. புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ராஜசேகரை கைது செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
8. தசரா பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள 6 கோயில்கள் மற்றும் 11 ரயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
9. தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். 3 ஆண்டுகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10. சென்னை முகலிவாக்கத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பியை மிதித்து 14 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், மின்னுற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் 4 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
11. முதல்வர் எடப்பாடி உடனான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள பன்னீர்செல்வம், “நாங்கள் இருவரும் சிறந்த நட்புடனேயே இருக்கிறோம். என்னையும் முதல்வரையும் பிரிக்கும் சூழ்ச்சி பலிக்காது” எனக் கூறியுள்ளார்.
12. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எஃப்) வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
13. சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 30ஆம் தேதியன்று வெடிகுண்டு வெடிக்கும் என சர்வதேச காலிஸ்தான் ஆதரவாளர் குழு என்ற பெயரில் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.