கேரளாவில் நடந்த ‘தமிழ்பெண்’ கல்யாணம்.. இப்போ ‘வைரல்’ டாபிக்கே இதுதான்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் சமீபத்தில் தமிழ் பெண்ணுக்கு நடந்த திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருப்ரயா நகரை சேர்ந்தவர் ரசாக். விமானப்படையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருப்ரயா சாலையில் அழுக்கு நிறைந்த ஆடைகளுடன் கவிதா என்ற 8 வயது சிறுமி அழுதுகொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். உடனே சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ரசாக்கிற்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 4-வது மகளாக கவிதாவையும் அவரது மனைவி நூர்ஜகான் வளர்க்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் கவிதாவின் பெற்றோர் சேலத்தில் இருப்பதை ரசாக் கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து மகளைப் பார்க்க சேலத்தில் இருந்து கேரளாவுக்கு சென்றுள்ளனர். பெற்ற தாய், தந்தை வந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், இத்தனை வருடங்களாக வளர்த்த பெற்றோரை பிரிவதற்கு கவிதாவுக்கு மனமில்லை. இதனால் கேரள வளர்ப்பு பெற்றோருடனே கவிதா தங்கியுள்ளார். ஆனாலும் தன்னுடைய பெற்றோரை பார்க்க அடிக்கடி சேலத்துக்கு செல்வதும், அவர்கள் கவிதாவைப் பார்க்க கேரளாவுக்கு வருவதுமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் திருமண வயதை எட்டிய கவிதாவுக்கு ரசாக் வரன் பார்க்க ஆரம்பித்தார். இதனை அடுத்து நட்டிகா பகுதியை சேர்ந்த போட்டோகிராபர் ஸ்ரீஜித்தை தன் மகள் கவுதாவுக்கு ரசாக் நிச்சயம் செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 6ம் தேதி கவிதா-ஸ்ரீஜித்துக்கு இந்து முறைப்படி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு தனது வீட்டின் அருகே உள்ள 4 சென்ட் நிலத்தை திருமணப் பரிசாக மகள் கவிதாவுக்கு ரசாக் எழுதி வைத்தார். மேலும் ரசாக் மகள்கள் 12 பவுன் தங்க நகைகளை தங்களது சகோதரி கவிதாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தனர். மதம், மொழி கடந்து நடந்த இந்த திருமணம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் நடந்து 10 நாட்களை கடந்தாலும் மணமக்களின் போட்டோவை இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News Credits: Mathrubhumi
மற்ற செய்திகள்