'காலையில எழுந்ததும் டாய்லெட்டுக்கு மொபைல் கொண்டு போறீங்களா'... 'ரைட்டு பெரிய ஆபத்து இருக்கு'... அதிர்ச்சி தகவலை சொன்ன ஆய்வாளர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகழிவறைக்கு மொபைல் கொண்டு செல்பவர்களுக்கு பெரும் ஆபத்து காத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்றைய இயந்திர உலகில் ஸ்மார்ட் ஃபோன்கள் மக்களின் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைத்து விட்டது என்றே சொல்லலாம். உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும் விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் இன்றைய தொழில்நுட்பம் என்பது வளர்ந்து விட்டது.
ஆனால் மொபைல் போனின் பயன்பாடு என்பது பயணம் செய்யும்போது, நண்பர்களோடு உரையாடும்போது, தூங்கும் போது, சாப்பிடும் போது, குளிக்கும்போது என்ற ரீதியிலிருந்து கழிவறைக்குச் செல்லும்போது மொபைல் இல்லாமல் போக முடியாது என்ற நிலைக்கு தற்போது பலர் வந்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை கழிவறைக்கு நாளிதழ்களைக் கொண்டு செல்வதைச் சிலர் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
அந்த பழக்கம் தற்போது அடியோடு மாறி ஸ்மார்ட் போன்களை கொண்டு செல்லும் அளவிற்கு வந்துள்ளது. கழிவறையில் அமர்ந்து கொண்டே அன்றைய தினத்தின் செய்திகளையும், உலக செய்திகளையும் அறிந்து கொள்ளலாம் எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இதற்குப் பின்னால் பல உடல் உபாதைகள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படும் பல ஆபத்துகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
வீட்டில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருப்பது கழிவறையில் தான். நிச்சயம் கழிவறையின் கதவு பைப்புகள் என அனைத்திலும் கிருமிகள் நிறைந்திருக்கும். கழிவறைக்குச் செல்லும் நாம் அங்கிருக்கும் பொருட்களைத் தொட்டு விட்டு, அதே கையுடன் தான் ஃபோனையும் பயன்படுத்துவோம். இதனால் எளிதில் தொற்று நமக்குப் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
இது தொடர்பாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 95% சுகாதாரப் பணியாளர்களின் மொபைல் ஃபோன்கள் தொற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்களால் சூழப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கழிவறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவும் நாம் மொபைல் போன்களில் இருக்கும் கிருமிகளை மறந்து விடுகிறோம்.
பின்னர் அதே கையுடன் அந்த போன்களை உபயோகிக்கும் நாம் அதன் மூலம் நமக்கும் அந்த கிருமிகள் பரவும் ஆபத்தை மறந்து விடுகிறோம். அதேபோன்று டாய்லெட்டில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே மொபைல் ஃபோனை ஸ்க்ரோலிங் செய்வது உடல் ரீதியான பல பிரச்சனைகளுக்கு அச்சாரமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்து மொபைலை உபயோகிப்பதால் மூல நோய், மல சிக்கல், ஆசனவாய் மீது அதிக அழுத்தம் இடுப்பு பகுதியில் வலி போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். இதற்கு ஒரே தீர்வு கழிவறைக்குச் செல்லும்போது மொபைல் போன்களை வெளியே விட்டுச் செல்வது மட்டும் தான்.
மற்ற செய்திகள்