‘ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 14 மரணம்’.. ‘30 வருடமாக மணப்பெண் உடை அணியும் ஆண்’.. மிரள வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடும்பத்தை காக்க 30 வருடங்களாக ஆண் ஒருவர் பெண் வேடமணிந்து அலையும் சம்பவம் மிரள வைத்துள்ளது.
உத்தரபிரேத மாநிலம் ஜலல்பூர் அருகே ஹவுஸ்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் சின்தாஹரன் சவுஹான் (66). இவருக்கு 14 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது. ஆனால் உடல்நிலை சரியில்லாமல் சில நாட்களிலேயே அவரது மனைவி இறந்துவிடுகிறார். இதனை அடுத்து செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக சவுஹான் மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு மளிகை கடைக்காரருடன் நட்பாக பழகியுள்ளார். அப்போது மளிகை கடைக்காரர் தனது மகளை சவுஹானுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த விஷயம் சவுஹானின் குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது. உடனே சவுஹானை ஊருக்கு வருமாறு கூறியுள்ளனர். அவரும் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவர் பிரிந்து சென்றதால் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் ஒரு வருடம் கழித்துதான் சவுஹானுக்கு தெரியவந்துள்ளது. அந்த சமயம் அவருக்கு முன்றாவது திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணமான சில நாட்களில் சவுஹானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. மேலும் குடும்பத்தில் ஒவ்வொருவராக உயிரிழந்துள்ளனர். அப்பா, சகோதரர், அண்ணி, அவர்களின் 2 மகன்கள் என அடுத்தடுத்து இறந்துள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு சவுஹான் சகோதரரின் மூன்று மகள்கள், மகன் ஆகியோர் திடீரென உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த சவுஹான், ‘ஒருநாள் என் கனவில் தற்கொலை செய்துகொண்ட மனைவி வந்தாள். தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கதறி அழுதாள். அவளிடம் நான் மன்னிப்பு கேட்டேன். என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடு, உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என கூறினேன். அப்போது, என்னை உன்னுடன் வைத்துக்கொள். நீ மணமகள் போல உடை அணிய வேண்டும். அதை எப்போதும் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என கேட்டாள். நான் அதை ஏற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு மணமகள் போல் உடையும், தோடு, மூக்குத்தி அணிந்து வெளியே சென்கிறேன். அதில் இருந்து என் குடும்பத்தில் உயிரிழப்பு இல்லை. என் உடல்நிலையும் சரியாகிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், ‘முதலில் மணமகள் போல உடை, நகைகள் அணிந்து வெளியே செல்லும்போது எல்லோரும் சிரித்தனர். பின்னர் என் நிலையை உணர்ந்து கொண்டனர்’ என கூறியுள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூன்றாவது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார். சிலர் சவுஹானின் செயலை மூடநம்பிக்கை என்றும் மனைவிக்கு செய்த துரோகத்துக்காக தனக்குதானே தண்டனை கொடுத்துக் கொள்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.