எங்களுக்கு ‘Online exam’ தான் வேணும்.. திடீரென அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்திய மாணவர்கள்.. தடியடி நடத்தி கலைத்த போலீஸ்.. பரபரப்பு காட்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைனில் பொதுத்தேர்வை நடத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் தேர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் திடீரென உச்சத்துக்கு சென்று தற்போது பரவல் குறைந்து வருகிறது. இதனால் கடந்த மாதம் 24-ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேரடியாக நடத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனை அடுத்து பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி சிலர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்
இந்த நிலையில் நேற்று காலை பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்டின் வீட்டின் முன் திரள தொடங்கினர். இதனை அடுத்து திடீரென தாராவி அசோக்மில் நாக்கா பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது மாணவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தக்கூடாது, ஆன்லைனில்தான் நடத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். திடீரென மாணவர்கள் அதிகளவில் திரண்டதால் தாராவி சயான்-பாந்திரா லிங்க் ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவர்கள் மீது போலீசார் தடியடி
தகவலறிந்து வந்த போலீசார், மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் மாணவர்கள் நீண்ட நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தாராவி சயான்-பாந்திரா லிங்க் ரோடு பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைச்சரின் வீட்டை நோக்கி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி சாலையில் திரண்டு இருந்த மாணவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் தகவல்
இதுகுறித்து கூறிய போலீஸ் அதிகாரி ஒருவர், ‘போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சமூகவலைதளத்தில் பரவிய தகவலை வைத்து தானே, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து உள்ளனர். போராட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி எதுவும் இல்லை. அவர்கள் அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வீடு நோக்கி செல்ல முயன்றனர். அதனால் தடுத்து நிறுத்தினோம்.
#WATCH | Maharashtra: Students protested outside State School Education Minster Prof. Varsha Eknath Gaikwad's house, against offline exams
Students' demand is online exams for classes 10th & 12th, in view of #COVID19 crisis. We tried convincing & dispersing them:DCP Pranay Ashok pic.twitter.com/ieqAmhq0rs
— ANI (@ANI) January 31, 2022
தடியடியில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிலர் மட்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்’ என கூறியுள்ளார். ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்