'வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி'... 'மற்ற தடுப்பூசிகளை விட திறன் அதிகமா'?... ஒரு டோஸ் விலை என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக ரஷியா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது.
ரஷ்யாவின் ரஷிய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்று நோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்து விநியோகம் செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யவும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அவசர தேவைக்காக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பயன்படுத்திக்கொள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.
இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்தது. முதற்கட்டமாகக் கடந்த 1ம் தேதி 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தடைந்தன. மேலும் பல லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வர உள்ளன. அதேபோல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் உள்ளூர் தயாரிப்பு பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் பணியை ரெட்டிஸ் நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.
தடுப்பூசியின் விலை குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு டோஸ் மருந்து ரூ.995.40 (ரூ.948+5 சதவீதம் ஜிஎஸ்டி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசி அடுத்த வாரம் சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு கூறி உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கு 5 சதவீத ஜிஎஸ்டியுடன் சேர்த்து இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்யும்போது விலை மிகவும் குறைவாக இருக்கும் என ரெட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளை விட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது அதிக செயல்திறன் (91.6 சதவீதம்) கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்