‘என் மகனுக்கு ஆசையா வாங்கிக் கொடுத்த பரிசு’.. ‘தயவுசெஞ்சு திருப்பி தந்திருங்க’.. பேஸ்புக்கில் ‘மாற்றுத்திறனாளி’ போட்ட உருக்கமான பதிவு.. கேரள முதல்வர் அதிரடி உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாற்றுத்திறனாளி ஒருவரின் பேஸ்புக் பதிவைப் பார்த்து கேரள முதல்வர் அதிரடி உத்தரவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள உருளிகுண்ணம் பகுதியைச் சேர்ந்தவர் சுனீஷ். மாற்றுத்திறனாளியான இவரது கால்கள் மேல்நோக்கி வளைந்திருப்பதால், குப்புற படுத்துக்கொண்டே தனது பணிகளை செய்து வருகிறார். மேலும் இவரது வலது கை முற்றிகும் செயல்படாது. இவ்வளவு சோதனைகளிலும் மன தைரியத்தை விடாமல் ஒரு தனியார் நிறுவனத்தில் சுனீஷ் வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.
சுனீஷுக்கு ஜினி என்ற மனைவியும், 4ம் வகுப்பு படிக்கும் ஜஸ்டின் மகனும், 1ம் வகுப்பு படிக்கும் ஜஸ்டியா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.5000 மதிப்புள்ள ஒரு சைக்கிளை சுனிஷ் பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சைக்கிளை யாரோ திருடிச் சென்றுள்ளனர். தன் மகனுக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த சைக்கிள் திருடுபோனதால் சுனிஷ் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார்.
உடனே தனது பேஸ்புக் பக்கத்தில், ‘அன்பு திருடர்களே, என் மகனின் பிறந்த நாளுக்காக நான் வாங்கிக் கொடுத்த சைக்கிள் அது. தயவுசெய்து திருப்பி தந்துவிடுங்கள்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
இந்த விவகாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சைக்கிள் திருடர்களை கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர் கோட்டயம் மாவட்ட ஆட்சியர் அஞ்சனாவை தொடர்பு கொண்ட முதல்வர், சுனிஷின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரிக்க கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சுனிஷின் வீட்டுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அஞ்சனா, ஒரு புத்தம் புது சைக்கிளை வாங்கி சிறுவன் ஜஸ்டினுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தெரிவித்த சுனிஷ், ‘எனது பேஸ்புக் பதிவை பார்த்துவிட்டு ஏராளமானோர் புதிய சைக்கிள் வாங்கி தர முன் வந்தனர். அவர்களுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். கேரள முதல்வரின் இந்த செயலை பாராட்டி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறனர். அதேவேளையில் மாற்றுத்திறனாளி தனது மகனுக்கு ஆசையாக வாங்கிக்கொடுத்த சைக்கிளை திருடியவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்