விளையாடிய குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு விரட்டினாரா பாஜக அமைச்சரின் மகன்? பீகாரில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிகார்: சுற்றுலாத்துறை அமைச்சர் நாராயாண் பிரசாத்தின் மகன், தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை விரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில், பாஜக அமைச்சர் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவர்களை கண்டு ஆவேசமடைந்த பப்லு குமார் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, சிறுவர்களுக்கும், பப்லு குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களை பயமுறுத்த கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், துப்பாக்கியை கண்டதும் தலைதெறிக்க ஓடிய சிறுவர்களை விரட்டி தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், இச்சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறியதாவது, 'சிறுவர்கள் சிலர் இங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று அங்கு வந்த நான்கைந்து நபர்கள் சிறுவர்களை அடிக்க தொடங்கினர். அவர்களில் அமைச்சரின் மகனும் இருந்தார்' எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அமைச்சரின் வீட்டுக்குச் சென்று காரை அடித்து நொறுக்கினர். மேலும், சிறுவர்களை அடித்து விரட்டிய பப்லு குமாரை சரமாரியாக தாக்கினர். அமைச்சரின் உறவினர்கள் தாக்கப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
85 வயசு மைசூரு மாப்பிள்ளைக்கு.. 65 வயசுல கிடைச்ச மணமகள் (மகாராணி).. சில்லு கருப்பட்டி போல் காதல் கதை
பின்னர் இச்சம்பவம் குறித்து அமைச்சர் நாராயண் கூறியதாவது, 'எனது நிலத்தை அபகரிக்க கிராம மக்கள் முயன்றனர். எனது குடும்பத்தினரை தாக்கினர். அதை தடுப்பதற்காகவே, எனது மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அவரையும் பொதுமக்கள் கற்களால் தாக்கினர். எனது வாகனத்தையும் சேதப்படுத்தினர். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நோக்கி தனது மகன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததாக கூறுவதில் சற்றும் உண்மையில்லை' என தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி தலைவர் சக்தி சிங் யாதவ், 'கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளை தாக்க அமைச்சரின் மகனுக்கு உரிமை யார் கொடுத்தது? பிகாரில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. சட்டத்தை இயற்றுபவர்கள் சட்டத்தை மீறும்போது மாநிலத்தில் யார் சட்டத்தை அமல்படுத்துவார்கள்' என்று கேள்வி எழுப்பினார்.
மற்ற செய்திகள்