பெத்த அம்மாவை கோவிலில் விட்டுட்டு தப்பிய மகன்.. சிம் இல்லாத போனை கையில குடுத்துட்டு போன மகனை நினைச்சு கதறும் அம்மா..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் தனது அம்மாவை கோவில் ஒன்றில் விட்டுவிட்டு தப்பிச் சென்ற மகனை அதிகாரிகள் தேடிவருகின்றனர். இது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்களது குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்யும் தியாகங்கள் ஏராளம். தங்களுடைய வசதிகளை குறைத்துக்கொண்டு பிள்ளைகளின் நலனுக்காகவே சிந்திக்கும் பெற்றோரை வளர்ந்தபின்னர் கைவிடும் பிள்ளைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தவிப்பு
கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹுலிகி கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஹுலிகெம்மா கோவில். இந்த கோவிலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது அம்மாவை அழைத்துவந்த மகன் அங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்கிறார். மேலும், தனது தாயிடம் சாதாரண ஒரு போனை கையில் கொடுத்துவிட்டு, தன்னுடைய போன் நம்பர் இது என ஒரு காகிதத்தாளையும் கொடுத்துவிட்டு போயிருக்கிறார் அவரது மகன்.
கோவிலின் மூலையில் அமர்ந்திருந்த அந்த 80 வயது மூதாட்டி தனது மகன் போன் செய்வார் என காத்திருந்திருக்கிறார் ஆனால், அவர் வரவேயில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் அவரை கண்டு பரிதாபம் அடைந்திருக்கிறார்கள். அவருக்கு உணவு மற்றும் போர்வை ஆகியவற்றை கொடுத்துள்ளனர். அப்போது அவரிடம் என்ன நடந்தது என சிலர் கேட்கவே, நடந்ததை கூறியுள்ளார் அந்த மூதாட்டி. அதன்படி அந்த போனை பரிசோதித்ததில் அதில் சிம்கார்டு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் அனைவரும்.
அதிர்ச்சி
அதனைத் தொடர்ந்து அவரது மகன் கொடுத்த பேப்பரில் எதுவும் எழுதப்படவில்லை என்றும் வெற்று காகிதம் அது என்பதை அறிந்தவுடன் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திடுக்கிட்டு போனார்கள். இதனை தொடர்ந்து காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தேசிய மூத்த குடிமக்கள் உதவி மைய மண்டல அதிகாரி முத்தண்ணா குட்னெப்பனவர் மற்றும் சக ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மூதாட்டியை முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். முனிராபாத் போலீசார் அவரை காப்பகத்திற்கு மாற்ற வேண்டிய உதவிகளை செய்திருக்கிறார்கள்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவரது பெயர் காசிம் என்றும் அவர் உஜ்ஜயனி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று கூறியிருக்கிறார் அந்த மூதாட்டி. இருப்பினும், இதைத் தவிர வேறு எந்த தகவலையும் அவரால் தெரிவிக்க முடியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்