'இதுல மட்டும்தான் இன்னும் ஆதார இணைக்கல.. இப்போ அதுக்கும்’ .. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவைப் பொருத்தவரை இந்திய அரசியலமைப்பு சாசனப்படி இந்திய குடிமகனாக இருப்பதற்கு எவ்வளவு தகுதிகள் இருந்தாலும் மிக அண்மையான தகுதியாக ஆதார் மாறியுள்ளது.

'இதுல மட்டும்தான் இன்னும் ஆதார இணைக்கல.. இப்போ அதுக்கும்’ .. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரதமர் மோடியின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் என்கிற இந்த தனிநபர் அடையாள அட்டை, சாதாரண மனிதனின் அதிகாரம் என்கிற பெயரில் ஒவ்வொருவருக்கும் இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட இலக்க எண்களை நம்முடைய பெயர் மற்றும் செல்போன் நம்பர்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆதாரானது அனைத்திலும் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்திய மக்கள் ஒவ்வொருவரின் சிம் கார்டு, குடும்ப அட்டை, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண்களை இணைக்க சொல்லி வங்கிகளும், செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களும் , சில சமயம் அரசும் நேரடியாகவே வலியுறுத்துகின்றன. இடையிடையே ஆதார் கட்டாயமாக்கப் படுவதற்கு எதிரான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தபடி இருந்தன. எனினும் இந்த வழக்குகள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று கை மாறிக்கொண்டே இருந்தன. இறுதியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றாலும், முதலில் ஆதார் அனைத்திற்கும் கட்டாயம் அல்ல என்கிற தீர்ப்பும், பின்பு அந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசின் மேல்முறையீடும் மாறி மாறி தொடரப்பட்டன.

இதனால் இன்றைய தேதியில் ஆதார் எதற்கு கட்டாயம் எதற்கு கட்டாயமல்ல என்பன போன்ற விதிகள் பலருக்கும் தெரியாமலே உள்ளது. இடையில் வந்த ஜியோ போன்ற சிம்கார்டுகள் ஆதார் எண்களை போன் நம்பருடன் இணைத்தால் சிம் கார்டு இலவசம் என்பன போன்ற சலுகைகளை அள்ளி தந்தன. இதனால் செல்போன் மற்றும் சிம்கார்டு போன்ற செல்போன் நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்கள் விற்றுத்தீர்ந்தன இல்லையோ, பலரும் ஆதார் கார்டு எடுக்க வேண்டிய சூழல் உருவானது. பின்னர், இனி ஆதார் கார்டு வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டரில் மட்டும்தான் இணைக்கப்படவில்லை; மற்ற எல்லாவற்றிலும் இணைக்கப்பட்டு விட்டது என்கிற சூழல் நீடித்து வந்தது.

இப்போது அதற்கும் ஒரு முக்கிய அறிவிப்பாக, இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சைபர் குற்றங்களை தடுக்க புதியதொரு மாற்று வழியை யோசித்துள்ளது. அதன்படி இணையவழி குற்றங்கள் பெருகி வருவதால் அவற்றைத் தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களான பேஸ்புக் உள்ளிட்டவற்றுடன் ஆதார் கார்டினை இணைக்கலாமா என்பது பற்றிய ஆலோசனையை தலைமைச் செயலாளர் நடத்தி, வரும் ஜூன் 6ஆம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.