‘ரூ.5 கோடி கேட்ட தன்னார்வலர்!’ .. பதிலுக்கு சீரம் நிறுவனத்தின் ‘செக் மேட்’ அறிக்கை! சூடுபிடிக்கும் ‘தடுப்பு மருந்து பரிசோதனை’ விவகாரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியான ‘கோவிஷீல்டு’ மருந்தை புனே - இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து, 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துகிறது. இதில் சென்னையில் 40 வயதான வர்த்தக ஆலோசகர் ஒருவர் தன்னார்வலராக முன்வந்து, தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி சோதனையில் பங்கேற்றார். ஆனால் அவருக்கு அதன் பின் கடுமையான நரம்பு மற்றும் உளவியல் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கும், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை செயல் அதிகாரிக்கும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கும் இன்னும் தொடர்புடைய சிலருக்கும் அவரது சார்பில் தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டதுடன், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை, தயாரிப்பு, வினியோகம் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு உண்டான உடல் நல பாதிப்புக்கும் தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இல்லை என்று சீரம் நிறுவனம் குறிப்பிட்டதுடன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னார்வலரின் உடல் நிலைக்காக அனுதாபப் படுகிறோம். தன்னார்வலரின் உடல் பாதிப்புக்கும் தடுப்பு மருந்து சோதனைக்கும் எந்தத் தொடர்பும் முற்றாகக் கிடையாது.
தன்னார்வலரின் தற்போதைய இந்த நோட்டீஸ் தவறான உள்நோக்கத்தைக் கொண்டுள்ளதால், கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையுடன் தொடர்புபடுத்துகிறார். உடல் நல பிரச்சினைகள் தடுப்பூசி சோதனையால் உண்டாகவில்லை என மருத்துவக் குழு தன்னார்வலரிடம் விளக்கிய போதிலும், நிறுவனத்துக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அவர் இதனை பொதுவெளிக்கு எடுத்துச் சென்றதால், 100 கோடி ரூபாய் இழப்பீடு கோர உள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்