'பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசி...' - 2-ஆம் மற்றும் 3-ஆம் கட்ட பரிசோதனைக்கு இந்தியாவில் அனுமதி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி முதற்கட்ட வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2ஆம் கட்டமாக மக்களுக்கு பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியுள்ளது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவி வந்தாலும் சீனாவை தவிர மற்ற நாடுகளை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பல தடுப்பு மருந்துகளை உருவாக்கி அதை பல்வேறு கட்டங்களாக பரிசோதித்தும் வருகின்றனர்.
அதில் பெருமளவு படிகளை எட்டியிருப்பது இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த 'கோவிஷீல்டு' தடுப்பூசியாகும்.
இந்திய மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 கட்ட மனித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசி முதற்கட்ட மனித பரிசோதனையில் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டதில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
தற்போது இந்தியாவின் சீரம் இன்டிடியுட் நிறுவனம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி தரக்கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) கோரிக்கை விடுத்தது. அதன் காரணமாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவனம் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்ஒசி) சிறப்பு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு அடுத்த கட்டமாக செலுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது.
அதையடுத்து சிடிஎஸ்ஒசி அமைப்பின் நிபுணர் குழு கடந்த 31 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை வழங்கியது.
நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் பெயரில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இந்திய சிரம் இன்ஸ்டிடியுட்டின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
இந்த இறுதிக்கட்ட பரிசோதனைக்காக சிரம் இன்ஸ்டிடியுட் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,600 பேருக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த 2 மற்றும் 3 ஆம் கட்டமாக செலுத்தி தடுப்பூசி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைகிறதா? என்ற கேள்விக்கு இந்திய மக்கள் மட்டுமில்லாமல் உலக நாடுகளே வெற்றி செய்திக்காக காத்துக்கொண்டுள்ளது எனலாம்.
மற்ற செய்திகள்