முன்னாள் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போட்ட ‘பகீர்’ திட்டம்.. அம்பானி வீட்டின் முன் வெடிபொருளுடன் கார் நின்ற வழக்கில் திடீர் திருப்பம்.. NIA விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் முன் வெடிபொருளுடன் கார் நின்ற வழக்கில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் உள்ள இவரது வீட்டின் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஸ்கார்பியோ கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதனை சோதனை செய்து பார்த்தலில், வெடிக்கக் கூடிய ஜெலட்டின் குச்சிகள் மற்றும் மிரட்டல் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
இதனை அடுத்து மும்பை போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர். விசாரணையில் மும்பை போலீஸின் கிரைம் இன்டலிஜன்ஸ் பிரிவு தலைவராக இருந்த உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து இந்த வழக்கு NIA-க்கு (National Investigation Agency) மாற்றப்பட்டது.
NIA நடத்திய விசாரணையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாஸ், முன்னாள் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் ஷர்மா உள்ளிட்ட 5 போலீசார், முகேஷ் அம்பானியை மிரட்டி பணம் பறிக்க இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்காக மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் 100 நாட்கள் போலியான பெயரில் அறை எடுத்து அவர்கள் தங்கியுள்ளதாக NIA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரானை, தனது காரை காணவில்லை என காவல் நிலையத்தில் பொய்யாக புகார் அளிக்க வைத்துள்ளனர். அதன்பின்னர் இந்த திட்டத்துக்கு மன்சுக் ஹிரான் ஒத்துழைக்க மறுக்கவே, அவரை கொலை செய்துள்ளனர். இதற்காக கூலிப்படைக்கு 45 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த வழக்கை திசை திருப்புவதற்காக டெலிகிராம் செயலியில் இருந்து ஜெய்ஷ் உல் ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சாட்சியங்கள் இல்லாமல் செய்வதற்காக அம்பானியின் வீடு இருக்கும் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை குர்லாவில் உள்ள மிதி நதியில் சச்சின் வாஸ் போட்டதாகவும் NIA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் அம்பானியிடம் பணம் பறிப்பதற்காக முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பகீர் திட்டம் தீட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்