ரோட்டை மறித்து பார்க் செய்யப்பட்ட வாகனங்களை போட்டோ எடுத்து அனுப்பினால் 500 ரூபாய் பரிசு..ஆகா.. இது நல்லா இருக்கே.!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாலையை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அனுப்புபவர்களுக்கு 500 ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருக்கிறார்.
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் மக்கள் தனிநபர் தேவைக்காக வாகனங்களை வாங்குவதிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் நிலை வந்துவிட்டது. இதுவே பார்க்கிங் சிக்கல்களுக்கு வித்திடுவதாக கூறுகிறார்கள் அதிகாரிகள்.
வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாததாலும், சிலர் பொறுப்பு இல்லாமல் வாகனங்களை கண்ட இடங்களில் பார்க் செய்வதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுவதை நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம். இந்நிலையில், இந்த சிக்கலை தீர்க்க புதிய சட்டத்தினை இயற்ற இருப்பதாக அறிவித்து உள்ளார் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி.
புது சட்டம்
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான இன்டஸ்ட்ரியல் டிகார்பனைசேஷன் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் சாலைகளில் விதிமுறைகளை மீறி வாகனங்களை பார்க் செய்வது அதிகரித்து வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த புதிய சட்டத்தினை இயற்ற இருப்பதாகவும் கட்கரி தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியில் பேசிய அவர்," சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அனுப்புபவர்களுக்கு 500 ரூபாய் பரிசாக அளிக்கப்படும். மேலும், அவ்வாறு வாகனங்களை நிறுத்தி சாலைகளை ஆக்கிரமிப்போருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்றார்.
கார்பன் கட்டுப்பாடு
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க, கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், எதிர்கால இந்தியா சுற்றுச்சூழலில் மேம்பட்ட நாடாக இருக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். வரும் நாட்களில் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தி, அதே நேரத்தில் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் எனவும் கட்கரி வலியுறுத்தினார்.
மற்ற செய்திகள்