19 வயது இளைஞர் சித்ரவதை.. போலீஸ் ஸ்டேஷன் முன் உடல் வீச்சு.. ரௌடியின் செயலால் அதிர்ந்த போலீஸ்
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தில் இரு தரப்பு ரவுடிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 19 வயது இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டு உடல் காவல் நிலையம் முன் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பல ரவுடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோட்டயத்தை சேர்ந்த ஜோமோன் ( 40), மற்றும் சூரியன் ஆகியோருக்குமிடையே முன் விரோதம் இருந்தது. இருவரும் ரவுடி கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். ஜோமோன் மீது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்து சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்துள்ளார்.
அதேபோன்று அவரது கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜோமோன் ரவுடி சூரியனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிகிறது. தலைமறைவாக இருந்து வந்த ரவுடி சூரியன் சில நாட்களுக்கு முன்பு, கொடைக்கானலில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவுட்டுள்ளார். அதில் இடுக்கி மாவட்டம் விமலகிரி பகுதியை சேர்ந்த ஷான் பாபு என்ற 19 வயது இளைஞர், ரவுடி சூரியனுடன் இருப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஷான் பாபுவும் ரவுடி சூரியனும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவர்களது புகைப்படத்தை பார்த்த ஜோமோன் ஷான் பாபுவை விசாரித்தால் சூரியனை பிடித்துவிடலாம் என நினைத்து திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த 16ம் தேதி இரவு இளைஞர் ஷான் பாபு ரவுடி ஜோமோனால் ஆட்டோவில் வைத்து தனது தாயார் முன்பே கடத்தி செல்லப்பட்டார். இதுகுறித்து ஷான் பாபுவின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தும் போலீசார் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரவுடி ஜோமோன் இறந்தவரின் உடலை தோளில் சுமந்து வந்து கோட்டயம் கிழக்கு காவல் நிலையம் முன்பு வீசிவிட்டு தப்பி செல்ல முயற்சித்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக ஜோமோனை கைது செய்தனர். ஜோமோன் கைது செய்யப்படும்போது போதையில் இருந்ததாக தெரிகிறது. காவல் நிலையம் முன் வீசப்பட்ட உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் கொல்லப்பட்ட நபர் ஷான் பாபு என்பது உறுதியானது.
மிக கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோமோனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்