கல்யாணமான ‘காதல் ஜோடியை’ பிரித்த பெற்றோர்.. விசாரணையில் இளம்பெண் சொன்ன பதில்.. நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் பிரித்த நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞரும், 21 வயது இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் தங்களது மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இளைஞர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக கணவரிடமிருந்து பிரித்து அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் தனது மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என இளைஞர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார். மேலும் அப்பெண்ணின் பள்ளிச் சான்றிதழின் அடிப்படையில் 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தவர் என்பது நிரூபிக்கப்பட்டது. இதனால் அப்பெண் தனது கணவருடன் வாழ முழு உரிமை இருக்கிறது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும் இதுகுறித்து தெரிவித்த நீதிபதிகள், ‘ஒரு நபர் தனது வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என சமூகத்தால் தீர்மானிக்க முடியாது. அரசியலமைப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்கிறது. ஒருவர் தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம், உரிமையின் ஒரு முக்கிய அம்சமாகும். தற்போதைய வழக்கில், இப்பெண் மேஜர் என்பதால் யாருடன் வாழ விருப்பம் என முடிவெடுக்க முழு உரிமை உள்ளது. அதனால் மூன்றாவது நபரின் தலையீடு இல்லாமல் அவர் விருப்பப்படி வாழ்க்கையை தொடரலாம்’ என தெரிவித்தனர்.
மேலும் இளைஞர் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்தனர். இதனை அடுத்து கணவரிடம் இளம்பெண் ஒப்படைக்கப்பட்டார். காதல் தம்பதியினர் வீடு சென்று சேரும் வரை போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மற்ற செய்திகள்