சாதா பட்டன் போன் இருந்தாலே போதும்.. இனி UPI மூலமா பணம் அனுப்பலாம்.. அசத்துறாங்கப்பா RBI.. முழு விபரம்
முகப்பு > செய்திகள் > இந்தியாதொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக நம்மால் நினைத்த நேரத்தில் பல செயல்களை அதிக சிரமின்றி செய்ய முடிகிறது. அதன் ஒரு பகுதியாக யு.பி.ஐ (UPI) என சுருக்கமாக அழைக்கப்படும் யுனைட்டெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் உதவியுடன் நம்மால் எளிதில் பணம் அனுப்பவும் கட்டணங்களை செலுத்தவும் முடிகிறது.
இருப்பினும் , இதற்கு ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் வசதி தேவை. ஆனால், சாதாரண பட்டன் போன்களை பயன்படுத்தும் நபர்களிடமும் UPI சேவையை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இயங்கி வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை செய்வதற்கான 'யுபிஐ-123 பே' சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
40 கோடி வாடிக்கையாளர்கள்
இதுகுறித்துப் பேசிய சக்திகாந்த தாஸ்," இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள் சாதாரண செல்போன் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்கள் டிஜிட்டல் நவீனமயத்தில் பங்கேற்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
என்ன செய்ய வேண்டும்?
'யுபிஐ123 பே' சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள், தங்களது வங்கி கிளைக்கு சென்று தங்களது போன் நம்பரை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பின்னர் தங்களது டெபிட் கார்டை உள்ளீடு செய்து, அதற்கான யுபிஐ பாஸ்வேர்டு உருவாக்கிட வேண்டும்.
4 வகைகளில் பணம் அனுப்பலாம்
இந்த யுபிஐ123 பே -ல் நான்கு வழிகளில் பணப் பரிமாற்றத்தினை செய்ய முடியும். அவை,
1. இதற்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் செயலியை பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.
2. ஐவிஆர் (Interactive Voice Response) எண்ணுக்கு கால் செய்து அதில், யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது வங்கி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து பணம் அனுப்பலாம்.
3. அருகில் இருக்கும் தொலைபேசிகளுக்கு ஒலி மூலம் பணம் அனுப்பும் தொழில்நுட்பம் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்வது.
4. ஆர்.பி.ஐ கொடுத்திருக்கும் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து பணம் அனுப்பலாம்.
பிற சேவைகள்
இந்த யுபிஐ123 பே சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் சிலிண்டர் பில், மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றையும் செய்யலாம். வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம், ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் இடங்களிலும் கூட இந்த சேவை மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள்
இது குறித்த விவரங்களை விரிவாக தெரிந்துகொள்ள பயனர்கள் www.digisaathi.info என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது டிஜிட்டல் பணம் செலுத்துவது தொடர்பான குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 14431 மற்றும் 1800 891 3333 என்ற எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்