"பல தடவ சொல்லியும் கேக்கல.." குப்பை விவகாரத்தில் பஞ்சாப் முதல்வர் வீட்டுக்கு Fine.. மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை
முகப்பு > செய்திகள் > இந்தியாமாநிலத்தின் முதலமைச்சர் வீட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது தொடர்பான செய்திகள், தற்போது இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் முதல் அமைச்சரான பகவந்த் மானுக்கு சொந்தமான வீட்டில் இருந்து, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, அதிக அளவில் குப்பைகள் போடப்பட்டதாக புகார் ஒன்று எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சண்டிகர் மாநகராட்சியை சேர்ந்த பாஜக கவுன்சிலரான மகேஷிந்தர் சிங் சித்து, குற்றம் ஒன்றை சுமத்தி அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக பல முறை மாநகராட்சி சார்பாக முதலமைச்சர் பகவந்த் மானின் வீட்டிற்கு எச்சரிக்கையும் விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை சரிவர பின்பற்றாமல் இருந்ததால், முதலமைச்சர் பகவந்த் மானின் வீட்டிற்கு மாநகராட்சி தற்போது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக கவுன்சிலர் மகேஷிந்தர் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவுன்சிலர் சித்து பேசுகையில், "கடந்த ஒரு வருடமாக அவரது வீட்டில் இந்த குப்பை போடும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. பொதுவாக முதல்வர் ஒரு வீட்டிற்குள் இருக்கும் போது அங்கே சுமார் 250 முதல் 300 பேர் வரை வீட்டில் வந்து செல்லும் பழக்க வழக்கம் நிச்சயம் இருக்கும். அப்படி இருக்கையில், முதல்வர் வீட்டில் உள்ள சமையலறை கழிவுகள், தோட்டக் கழிவுகள் உள்ளிட்ட ஏராளமான குப்பைகள் வீட்டின் இருபுறமும் வீசப்பட்டு வந்துள்ளது. இது பற்றி சுற்றி இருந்த மக்கள், புகாரும் அளித்தனர்.
முதலில் முதல்வர் இல்லத்தில் உள்ள ஊழியர்களிடமும் வீட்டுக்கு வெளியே குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என்றும் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கோரிக்கை விடுத்தும் பார்த்து விட்டோம். ஆனால் அது நிற்கவே இல்லை" என சித்து தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் பகவந்த் மான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர் சித்து குறிப்பிட்டுள்ளார்.
பலமுறை எச்சரித்தும் கேட்காததால் முதலமைச்சர் வீட்டில் இருந்து குப்பையைக் கொட்டியதற்காக முதலமைச்சர் வீட்டிற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம், பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தற்போது ஒரு பேசு பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்