'திடீரென போன வேலை'...'விசிட்டிங் கார்டால்' அடித்த 'ஜாக்பாட்'...வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவேலை போன நிலையில், விசிட்டிங் கார்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே மாறிய சுவாரஸ்ய சம்பவம் புனேயில் நடந்துள்ளது.
புனேயைச் சேர்ந்தவர் கீதா காலே. இவர் அங்குள்ள வீடுகளில் துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளை செய்து வரும் கீதா, அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் பார்த்து கொண்டிருந்த வேலை பறிபோனது.
மாதந்தோறும் வரும் 4000 ரூபாய் ஊதியத்தை நம்பி இருந்த கீதாவிற்கு இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கீதாவின் நிலை குறித்து அறிந்த, தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த மேலாளராக பணியாற்றி வரும் தனஸ்ரீ என்பவர் அவருக்கு தன் வீட்டில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கினார். அதோடு பணிப் பெண் கீதா காலேயின் பெயர், அனுபவம், அவர் செய்யும் வீட்டு வேலைகள், அதற்கான ஊதியம் ஆகியவற்றையும் அவரது தொலைபேசி எண்ணையும் தெரிவித்து அழகான விசிட்டிங் கார்டு ஒன்றை அவரே தயாரித்தார்.
முதலில் 100 கார்டுகளை அச்சிட அவர் அதனை தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அந்த பகுதியில் உள்ள மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பாதுகாவலர்கள் மூலம் வழங்கினார். மேலும் கீதா குறித்த விவரங்களை முகநூலிலும் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து தற்போது கீதாவிற்கு ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதுகுறித்து பேசிய கீதா காலே, வேலை போய்விட்டதே என்று சோகத்தில் இருந்தேன். ஆனால் ஒரு விசிட்டிங் கார்டு என்னுடைய வாழ்க்கையையே மாற்றி விட்டது. அதற்கு பெரும் உதவி செய்த தனஸ்ரீயை ஒரு நாளும் மறக்க மாட்டேன். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை, என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்கிறார் கீதா.