'சென்னை', கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள்ல... இருந்து 'எங்க' மாநிலத்துக்கு யாரும் வராதீங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கண்ட 3 மாவட்டங்களில் இருந்து தங்களது மாநிலத்துக்கு யாரும் வர வேண்டாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இந்தியளவில் கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா அதிகமாக உள்ளது. இதனால் இங்கிருந்து மக்கள் வெளி மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரி சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தங்களது மாநிலத்துக்கு யாரும் வர வேண்டாம் என கேட்டுக்கொண்டு உள்ளது.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ''வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுக்குள் இருந்த கொரோனா நம் எல்லையை திறந்து விட்டதன் காரணமாக அதிகமாக பரவியுள்ளது. சென்னையில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும். விழுப்புரம், கடலூர் எல்லையில் இருந்து வருபவர்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லையென்றால் புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. காரைக்காலில் கூட நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதியில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக நான் அமைச்சர்கள், தலைமைச் செயலர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசினேன். அவர்கள் கூறியதன்படி சென்னையில் இருந்து புதுவைக்கு மருத்துவம், திருமண விழா, துக்க நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மூலம் தான் கொரோனா அதிகம் பரவுகிறது.
எனவே முழுமையாக எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும். இ-பாஸ் வைத்திருந்தாலும் கூட சென்னையில் இருந்து புதுவைக்கு வருபவர்களை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வந்தால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். கடலூர், விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் இருந்து வருபவர்கள் நீரிழிவு நோய், பிரசவம் போன்ற சிகிச்சைக்காக வரலாம். இதுதவிர வேறு எந்த காரணத்துக்காகவும் யாரையும் உள்ளே விடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இ-பாஸ் வைத்திருந்தாலும் அவர்களை உள்ளே விடக் கூடாது. புதுவையில் உள்ளவர்கள் மூலம் கொரோனா பரவவில்லை. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் மூலம்தான் பரவுகிறது. ஒருபுறம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அதைப்போல் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். இதற்காக சில கட்டுப்பாடுகளை நாம் கொண்டு வந்துள்ளோம். அவை மாநில நிர்வாகத்தின் சார்பில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்,''என்றார்.
மற்ற செய்திகள்