‘குடியரசுத் தலைவர்’ பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்... தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ‘மாணவி’... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடியரசுத் தலைவர் வருகையையொட்டி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கிலிருந்து தன்னை வெளியேற்றி தனியே அமர வைத்ததாகக் கூறி முன்னாள் மாணவி ரபிஹா தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் இன்று நடைபெற்றது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் போராட்டம் செய்துவந்த நிலையில், பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவும் மாணவர் பேரவையினர் அழைப்பு விடுத்தனர். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விழாவிற்கு வரும்போது மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தலாம் எனத் தகவலும் வெளியாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் தனித்தனியாக முழுமையான சோதனைக்குப் பின்னரே விழா அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் வருகைக்கு முன்பாக தான் போலீசாரால் அரங்கத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு தனியே அமர வைக்கப்பட்டதாகவும், அவர் புறப்பட்ட பிறகே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் முன்னாள் மாணவியான ரபிஹா குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் தங்கம் வென்றிருந்தபோதிலும், ரபிஹா தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்து பட்டத்தை மட்டும் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்துப் பேசியுள்ள ரபிஹா, “கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த நான் 2018ஆம் ஆண்டு படிப்பை முடித்து தங்கப்பதக்கம் வென்றிருந்தேன். இந்நிலையில் விழா தொடங்கும் முன் என்னை அரங்கிலிருந்து வெளியேற்றி தனியே அமர வைத்தனர். நான் ஹிஜாப் அணிந்தது குற்றமா எனத் தெரியவில்லை. என்னை வெளியேற்றியதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. அதனால் என்னை வெளியேற்றி அவமானப்படுத்தியதை மேடையில் தெரிவித்து எனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்து பட்டத்தை மட்டும் பெற்றேன்” எனக் கூறினார்.