பொள்ளாச்சி வழக்கு... சுஜித், சுபஸ்ரீ... ஹைதராபாத் என்கவுண்டர்... 2019-ம் ஆண்டின் மறக்க 'முடியாத' துயரங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2019-ம் ஆண்டு முடிய இன்னும் 4 நாட்களே இருக்கின்றன. இதனையொட்டி வரும் புத்தாண்டு நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என உலகம் முழுவதும் இருக்கும் மக்கள், தங்களுக்கு தோன்றிய வழிகளில் பிரார்த்தனைகளையும், நமபிக்கைகளையும் விதைத்து வருகின்றனர்.

பொள்ளாச்சி வழக்கு... சுஜித், சுபஸ்ரீ... ஹைதராபாத் என்கவுண்டர்... 2019-ம் ஆண்டின் மறக்க 'முடியாத' துயரங்கள்!

இந்த ஆண்டு பொதுவாக அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைந்தாலும் மறக்க முடியாத சில துன்பியல் நிகழ்வுகளையும் அது ஏற்படுத்தி சென்றுள்ளது. அந்த வகையில் 2019-ம் ஆண்டின் மறக்க முடியாத சில துயரங்கள் குறித்து இங்கே காணலாம்.

பொள்ளாச்சி பயங்கரம்

சுற்றுலாத்தலமாக அறியப்பட்ட பொள்ளாச்சிக்கு இன்னொரு கோர முகமும் உண்டு என்று உலகிற்கு உணர்த்தியது ஒரு சம்பவம். காதல், நட்பு என பல்வேறு வழிகளில் பெண்களை ஏமாற்றி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த அவலம் கல்லூரி மாணவி ஒருவரின் புகாரால் பிப்ரவரி 24-ம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவை திடுக்கிட செய்த இந்த சம்பவத்துக்கு காரணமான சதீஷ், சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால் சென்னை உய்ரநீதிமன்றம் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

சுஜித் மரணம்

அக்டோபர்  மாதம் 25-ம் தேதி திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் 80 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் மீட்கப்பட்டால் தான் தீபாவளி கொண்டாடுவோம் என்று காத்திருந்த தமிழக மக்கள் பலருக்கும் சுஜித்தின் மரணம் ஒரு ஆறாத வடுவாக அமைந்தது. இதற்குப்பின் தமிழ்நாட்டில் மூடாமல் இருந்த ஆள்துளைக் கிணறுகள் துரிதகதியில் மூடப்பட்டது.

சுபஸ்ரீ மரணம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் சென்னை பள்ளிக்கரணையை பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியானார். இதற்குப்பின் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகள் விதித்தது. இதற்குப்பின் சென்னை முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட 3,964 பேனர்கள் அகற்றப்பட்டன.

ஃபாத்திமா லத்தீப்

சென்னை ஐஐடியில் தங்கி படித்துவந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் ஹாஸ்டல் ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலில் மதிப்பெண் குறைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் பேராசிரியர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நன்றாக படிக்கும் ஒரு மாணவி கல்லூரி வளாகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்தார்த்தா

கஃபே காபிடே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா மன அழுத்தம் காரணமாக ஆற்றில் விழுந்த தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது. 30000 பேருக்கும் அதிகமானோர் பணியாற்றி வந்த ஒரு நிறுவனத்தின் தலைவர் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்த கடிதம் பின்னர் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

ரீட்டா லங்காலிங்கம்

பிரபல கார் விற்பனை நிறுவனம் ஒன்றின் இணை இயக்குனராக இருந்த ரீட்டா லங்காலிங்கம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை அதிர வைத்தது. மன அழுத்தம் காரணமாக ரீட்டா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

பிரியங்கா ரெட்டி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி வேலை முடிந்து வீடு திரும்பியபோது, லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உள்ளிட்ட நான்கு பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் நால்வருக்கும் மரணதண்டனை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடினர். தொடர்ந்து நால்வரும் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.