"இந்தியாவில் கால்பந்து உலக கோப்பை நடத்துற நாளும்".. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநேற்று இரவு முதல் இந்த உலகமே கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விளையாட்டு கால்பந்து. இதன் உலக கோப்பை தொடர், கடந்த நவம்பர் மாதம் கத்தாரில் வைத்து ஆரம்பமாகி இருந்தது. அந்த நாள் முதல், இறுதி போட்டி நடந்து முடிந்த தினம் வரை உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் பரபரப்பாக தான் இருந்தனர்.
இதற்கு மத்தியில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகளும் இறுதி போட்டியில் தகுதி பெற்றிருந்தன. ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இறுதி போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறக்கும் வகையில் தான் அமைந்திருந்தது.
முதல் பாதி முழுக்க அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தி இருந்த நிலையில், அந்த அணி 2 கோல்களையும் அடித்திருந்தது. இரண்டாவது பாதியில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்வே, இரண்டு நிமிட இடைவெளியில் 2 கோல்களை அடித்து அர்ஜென்டினா அணிக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்திருந்தார். கூடுதல் நேரத்தின் முடிவில், 3 - 3 என்ற கணக்கில் சமனாக இருக்க, பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி, மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணிக்கு உலக அளவில் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் சூழலில் கால்பந்து போட்டிகள் குறித்த செய்திகள் தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கால்பந்து போட்டி நடைபெறுவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்து தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் வைத்து நடந்த வடகிழக்கு மாநிலங்களில் கவுன்சில் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய மோடி, கத்தாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியர்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் களத்தில் உள்ள வெளிநாட்டு வீரர்களின் திறனை கவனித்துக் கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதே போல, இந்திய இளைஞர் மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டியை போன்று இந்தியா நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என கூற முடியும் என்றும் மோடி பேசி உள்ளார்.
மேலும், கால்பந்து போட்டிகளில் ரெட் கார்டுகள் கொடுக்கப்படுவது போல, வட கிழக்கு மாநிலங்களிலும் வளர்ச்சிக்கு தடைகளாக இருந்தவைகளுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது என கால்பந்து போட்டியை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்