'அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு'... 'ராகுல் காந்தியை சந்தித்த பிரசாந்த் கிஷோர்'... முக்கிய ஆலோசனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்ற தேர்தலில் முக்கிய பேசு பொருளாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர்.இவர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆலோசகராகச் செயல்பட்டார். சமீபத்தில் சரத்பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். அதன்பிறகு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கடந்த வாரத்தில் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ராகுல் காந்தியை இன்று சந்தித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
பிரசாந்த் கிஷோர் உடனான ஆலோசனையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் ஹரீஷ் ராவத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலச் சட்டசபைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப் பிரியங்கா காந்தி லக்னோ செல்ல உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த வருடம் பஞ்சாப் மாநிலச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் சமீபத்தில் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியைச் சந்தித்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமான பிரசாந்த் கிஷோர் விரைவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகக் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வார் என்ற பேச்சு அரசியல் களத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
மற்ற செய்திகள்