ஸ்வீட் எடுங்க.. மயக்க மருந்து கலந்த லட்டு.. பேருந்தில் சகஜமாக பேசிய பெண் செய்த பரபரப்பு வேலை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி பிரசாதம் எனக்கூறி மயக்க மருந்து கலந்த லட்டை கொடுத்து தங்க நகைகளை திருடிச் சென்ற இளம் பெண்ணை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
உலகில் மிகவும் பணக்கார கோவிலாக கருதப்படுகிறது திருப்பதி. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கே வழங்கப்படும் பிரசாதமான லட்டுகள் உலக அளவில் புகழ்பெற்றது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றிருக்கிறார். சுவாமி தரிசனம் முடிவடைந்த பிறகு, அங்கிருந்து காளஹஸ்தி செல்ல நினைத்த அவர் பேருந்து வழியாக பயணித்திருக்கிறார். அப்போது, அவரது அருகே இளம் பெண் ஒருவர் இருந்திருக்கிறார். பயணத்தின் போது, இளம்பெண் பேச்சு கொடுத்திருக்கிறார். அதனால் பக்தரும் பேசியிருக்கிறார்.
அந்த பெண் தனது குடும்ப வாழ்க்கை குறித்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில், காளஹஸ்தியை பேருந்து நெருங்கிய போது அருகில் இருந்த லாட்ஜ் ஒன்றில் தங்கி ஓய்வெடுத்து செல்லலாம் என அந்த பெண் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து, அந்த பக்தரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இருவரும், அருகில் இருந்த லாட்ஜ் ஒன்றுக்கு சென்றிருக்கின்றனர்.
அப்போது, திருப்பதி பிரசாதம் எனக்கூறி லட்டுக்களை கொடுத்திருக்கிறார் அந்த பெண். அதனை சாப்பிட்ட பக்தரும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்திருக்கிறார். கண்விழித்துப் பார்த்தபோது, 6 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் காணாமல்போனது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே அந்த பெண்ணையும் காணாததால் சந்தேகமடைந்த அந்த நபர் உடனடியாக இதுகுறித்து காளஹஸ்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
உடனடியாக லாட்ஜ்க்கு விரைந்து வந்த காவல் துறையினர் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அந்த இளம்பெண்ணை பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சகஜமாக பேசி மயக்க மருந்து கலந்த லட்டை கொடுத்து 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை இளம்பெண் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்