ரூ.360 கோடியில் கட்டப்படும் பிரதமருக்கான பிரம்மாண்ட குடியிருப்பு வளாகம்.. 3 இடங்களை இணைக்க சுரங்கப்பாதைகள்.. பிரம்மிக்க வைக்கும் வசதிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ குடியிருப்பு வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதில் பல வசதிகள் செய்யப்பட இருக்கின்றன.
நாட்டில் உள்ள அதிகார மைய கட்டிடங்களை ஒன்றிணைக்க துவங்கப்பட்டது தான் சென்ட்ரல் விஸ்டா திட்டம். இதன்கீழ், பிரதமர் குடியிருப்பு, துணை குடியரசுத்தலைவருக்கான குடியிருப்பு, புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஆகியவை கட்டப்பட இருக்கின்றன. ஏற்கனவே இந்த திட்டத்தின் ஒருபகுதியாக ராஜபாதை அமைக்கும் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. இந்நிலையில், பிரதமர் குடியிருப்பு வளாகம் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசதிகள்
ராஷ்டிரபதி பவனில் உள்ள குடியரசு தலைவர் இல்லத்துக்கு அருகில் புதிய பிரதமர் குடியிருப்பு வளாகம் அமைய இருக்கிறது. இதற்காக 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த வீட்டில் தரைத் தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளம் மற்றும் விருந்தினர் இல்லம், சிறப்பு பாதுகாப்பு குழு அலுவலகம், துணை பணியாளர்கள் குடியிருப்பு, பிரதமரின் புதிய இல்லம், மத்திய பொதுப்பணித்துறை அலுவலகம் போன்றவை அமைய இருக்கிறது. இந்த குடியிருப்பு வளாகத்திற்கு 4 நுழைவு வாயில்களும், வளாகத்தை சுற்றி 25 கண்காணிப்பு கோபுரங்களும் அமைய இருக்கின்றன.
இந்த குடியிருப்பு வளாகத்தில் பிரதமரின் உள்துறை அலுவலகம், சிறப்புப் பாதுகாப்புக் குழு அலுவலகம் என 21,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும், துணை குடியரசு தலைவருக்கான குடியிருப்பு வளாகமும் அருகே கட்டப்பட இருக்கிறது. இங்கிருந்து பிரதமர் புதிய இல்லம் மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இணைக்கும் வகையில் சுரங்க பாதையும் அமைக்கப்பட இருக்கிறது.
டெண்டர்
பிரதமருக்கான புதிய குடியிருப்பு வளாகம் கட்டும் திட்டத்திற்கு கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி மத்திய பொதுப்பணித்துறை டெண்டர் கோரி அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து நிர்வாக காரணங்கள் காரணமாக இந்த தேதி ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி நிர்வாக காரணங்கள் காரணமாக இந்த அறிவிப்பையும் மத்திய பொதுப்பணித்துறை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்