"அடுத்த 25 வருசத்துல".. 76வது சுதந்திர தின விழாவில்.. பிரதமர் மோடி அறிவுறுத்திய 5 உறுதிமொழிகள்
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டின் 76வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து உறுதிமொழிகளை ஏற்க அறிவுறுத்தினார்.
டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றிய பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "நாட்டின் சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் என்பது இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினம் இந்தியாவின் புதிய தொடக்கமாகும். இன்றைய தினம், நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய முன்னோர்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூர வேண்டிய தருணம். அவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காக கொண்ட கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது. அண்ணல் காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாஹேப் அம்பேத்கர், சாவர்க்கர், சர்தார் படேல், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நாட்டின் மீது பெரும் கனவுகளை சுமந்து போராடியவர்கள்.
மங்கல் பாண்டே, பிஸ்மில், பகத் சிங் போன்ற புரட்சியாளர்களும், பழங்குடியின தலைவர்களான பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜு, ராணி லக்ஷ்மி பாய், சென்னம்மா, பாரதி, ஜெயபிரகாஷ் நாராயன் என நாட்டின் விடுதலைக்காக அனைத்து தரப்பிலும் தலைவர்கள் முன்னின்று வழிநடத்தியுள்ளனர். இதில் பெண் வீரர்கள் பலரும் அடக்கம். இத்தகையை பெரும் தலைவர்களை கொண்டிருப்பதை நினைத்து இந்தியா பெருமை கொள்ள வேண்டும்" என நரேந்திர மோடி கூறினார்.
தொடர்ந்து, நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். அதன் படி, அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்றும், இதற்காக நாட்டின் இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்து மனித குலத்தின் மேம்பாட்டிற்காக செயலாற்ற வேண்டும் என்ற முதல் உறுதிமொழியை கூறினார்.
இரண்டாவதாக, நம்மிடம் இருக்கும் காலனி ஆதிக்க அடிமை மனோபாவத்தை முற்றிலுமாக அழித்து, நாம் நமது நாட்டின் பெருமையை உணர வேண்டும் என்றும், மொழியை தடையாக உணராமல், அனைத்து மொழிகளையும் பெருமையாக கொள்ள வேண்டும் என மோடி எடுத்துரைத்தார்.
அடுத்ததாக, நமது பாரம்பரியத்தின் மீது பெருமை கொண்டு, நமது வேர்களின் மீது உறுதியான தொடர்பு வைத்திருந்தால் தான் உயர் பறக்க முடியும் என்றும், அப்படி பறந்தால் உலகிற்கே நாம் வழிகாட்டியாக இருந்து, உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறினார்.
நான்காவதாக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் மற்றும் மரியாதை வழங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு பெண் சக்தியை முக்கிய தூண் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
ஐந்தாவது உறுதி மொழியாக, பிரதமர், முதல்வர் மற்றும் மக்கள் என அனைவரும் தங்கள் கடமைகளை சரியாக ஆற்ற வேண்டும் என்றும் மோடி கூறினார். இப்படி ஐந்து உறுதிமொழிகளை குறித்து தன்னுடைய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
மற்ற செய்திகள்