ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. 60 வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ்.. மோடி வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி: உலகின் முதல் டிஏன்ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்த உள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு வரும் ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கொரோனாவின் புதிய வேரியண்டான ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் சூழலில் மக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்தும் நோக்கில் இன்று நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி தனது உரையின் போது, உலகின் முதல் டிஏன்ஏ தடுப்பூசி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழலில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உலகின் பல நாடுகளில் கொரோனாவின் புதிய வேரியண்ட் (பிறழ்வு வைரஸ்) ஆன ஒமைக்ரான் காரணமாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் பீதி அடையாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயம் கடைபிடியுங்கள். கைகளைத் தொடர்ந்து சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்துவதையும் கடைபிடிக்க வேண்டும் என நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு
இந்தியாவில் 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன. 5 லட்சம் ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகள் உள்ளன. 1.40 லட்சம் ICU படுக்கைகள் இருக்கிறது. 90,000 குழந்தைகளுக்கான ICU மற்றும் ICU அல்லாத படுக்கைகள் நாட்டில் உள்ளன. நம்மிடம் 3,000 க்கும் மேற்பட்ட PSA ஆக்ஸிஜன் ஆலைகள் உள்ளன. 4 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி
கொரோனா வைரஸ் இன் தீவிரத்தை உணர்ந்து, இன்று இந்தியாவில் 141 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 90% க்கும் அதிகமான 18 வயதிற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர். நாடு முழுவதும் தகுதி வாய்ந்த 61% பேருக்கு #கோவிட்19 க்கான தடுப்பு மருந்து முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் . வரும் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜனவரி 3, முதல் 15-18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
பூஸ்டர் தடுப்பூசி
நாட்டில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி இருக்கிறது. நமது பொருளாதாரமும் சீரான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் இணை நோய் உள்ளவர்கள் (கொமொர்பிடிட்டிகள்) மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் 2022 ஜனவரி 10 முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்" இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மற்ற செய்திகள்