உயிருடன் விமான நிலையம் திரும்பியதற்கு உங்களுடைய முதலமைச்சருக்கு நன்றி : பிரதமர் மோடி
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் காரை விவசாயிகள் வழிமறித்ததால் மோடி தனது பயணத்தை ரத்து செய்தது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் விமான நிலையத்திற்கு நான் உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி" என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது..
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் இன்று நடைபெற இருந்த பேரணியில் பேசுவதற்காக மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றிருந்தார். ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்த நிலையில் வானிலை மோசமானதால் சாலை வழியாக பயணிக்க திட்டமிட்டார்.
வழிமறித்த விவசாயிகள்
சாலை வழியாக தனது பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் மோடியை விவசாயிகள் வழிமறித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேம்பாலம் ஒன்றில் பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும்போது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபடவே, வேறுவழியின்றி அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம்,” மோசமான வானிலை காரணமாக பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டதால், சாலை மார்க்கமாக பயணிக்க காவல்துறை தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக பஞ்சாப் டிஜிபி தெரிவித்ததை தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக பயணிக்கத் தொடங்கினார். ஆனால் பஞ்சாப் அரசு பாதுகாப்பை நிலைநிறுத்தத் தவறி விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் குற்றச்சாட்டை மறுத்த பஞ்சாப் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ராஜ்குமார் வெர்கா," பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பிரதமரின் நிகழ்ச்சிக்கு கூட்டத்தை கூட்ட பாஜக தலைவர்கள் தவறியதால் பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு நன்றி
விவசாயிகள் சாலை மறியல் செய்ததால் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரிகளிடம், “பத்திண்டா விமான நிலையத்திற்கு நான் உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி" எனக் கூறியதாகத் தெரிகிறது.
மற்ற செய்திகள்