"மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!"... ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்?... "ஊரடங்கை மீறினால்..." பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு தழுவிய ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

"மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!"... ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்?... "ஊரடங்கை மீறினால்..." பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் இன்று காலை 10 மணிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியா எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளை மற்ற நாடுகள் பாராட்டி வருகின்றன. உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் விட்டிருந்தால், பாதிப்பு இன்னும் அதிகமாகியிருக்கும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை நான் புரிந்து கொண்டுள்ளேன். தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 21 நாள் ஊரடங்கு காரணமாகவே கொரோனாவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

எனவே, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு அவசியமாகிறது. நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் பகுதிகளில் ஏப்ரல் 20க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும். ஏழை மக்களின் நலன் கருதி ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்படுகிறது. தளர்வுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவினால், கண்டிப்புடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா தொற்று மையங்களாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனிப்பு அவசியமாகிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம். ஊழியர்களை யாரையும் பணியிலிருந்து நிறுவனங்கள் நீக்க வேண்டாம். பொதுவெளியில் ஏதாவது ஒரு முகக்கவசத்தை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். Aarogya setu செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் நம் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.