'ராகுல் ஜி, ராகுல் ஜி' சத்தம் எழுப்பிய சிறுமி... குரல் கேட்டு ஓடிவந்த 'ராகுல்காந்தி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு சென்றபோது சிறுமியின் குரல் கேட்டு ஓடிவந்த ராகுல்காந்தியின் செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

'ராகுல் ஜி, ராகுல் ஜி' சத்தம் எழுப்பிய சிறுமி... குரல் கேட்டு ஓடிவந்த 'ராகுல்காந்தி'!

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் அனைத்து தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக திருவம்பாடி பகுதிக்கு காரில் சென்றார் ராகுல் காந்தி.

அங்கிருந்து பிரசார மேடைக்குச் செல்லும்போது, மக்கள் கூட்டத்தில் இருந்து ஒரு சிறுமி பதாகையை தூக்கிப்பிடித்தபடி மிகவும் வேகமாக ‘ராகுல் ஜி , ராகுல் ஜி’ என சத்தம் எழுப்பினார். உடனடியாக அந்த சிறுமியைக் கவனித்த ராகுல், கூட்டத்துக்கு அருகில் சென்று அவரை அருகில் வரவழைத்துப் பேசினார். அந்த சிறுமியும், தான் வரைந்த ராகுல் காந்தியின் புகைப்படத்தை அவருக்குப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக்கொண்டு, அந்த சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்துச் சென்றார்.

கொச்சியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ரின்ஸி தான் அவ்வளவு கூட்டத்திலும் ராகுலின் கவனத்தை ஈர்த்தவர். இது பற்றி  கேரள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,  ‘ராகுல் காந்தியை எனக்கு நிறையப் பிடிக்கும். அவரை  சந்திப்பதற்காகவே நான் என் குடும்பத்துடன் கொச்சியில் இருந்து திருவம்பாடி வந்தேன். இந்த வருடம், எனக்கு வாக்கு அளிக்கும் உரிமை உள்ளது. என் ஓட்டு அவருக்குத்தான்.

அவரைச் சந்தித்து, நான் வரைந்த ஓவியத்தைத் தருவதற்காகவே இங்கு வந்தேன். ராகுலிடம் ஓவியத்தை எப்படியேனும் தந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. நான் நினைத்தது போலவே அவரும் நாங்கள் நின்றிருந்த இடத்துக்கு அருகில் வந்தார். ராகுல் நல்ல உள்ளம் கொண்டவர் என்பதால், அவருக்கு நான் கத்தியது கேட்கவே, அவர் என்னை அருகில் அழைத்துப் பேசினார். நான் இரவு முழுவதும் தூங்காமல் அந்த ஓவியத்தை வரைந்தேன். அதை ராகுல் ஜி பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்று படபடவென்று மகிழ்ச்சியில் பேசினார் ரின்ஸி.

LOKSABHAELECTIONS2019, RAHULGANDHI, KERALA, LITTLEGIRL, PAINTING