கண்ணை மறைத்த காதல்.. இந்திய எல்லையில் சிக்கிய பாக். இளம்பெண்.. வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலனுடன் இணைவதற்காக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
ஹைதராபாத் நகரத்தை சேர்ந்தவர் அகமது. இவருக்கு பாகிஸ்தானின் பைசலாபாத் பகுதியை சேர்ந்த கலீஜா நூர் என்னும் இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இது காதலாக மாறவே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், கலீஜாவை இந்தியாவுக்கு அழைத்துவர முடிவெடுத்திருக்கிறார் அகமது. இதை தொடர்ந்து தனது சகோதரர் உதவியுடன் கலீஜாவை அழைத்துவர நினைத்த அகமது அதற்காக பல வழிகளை யோசித்திருக்கிறார்.
காதல் பயணம்
இறுதியாக இந்தியா - நேபாளம் எல்லை வழியே கலீஜாவை அழைத்துவர முடிவெடுத்திருக்கிறார் அகமது. முதலில் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் சென்ற கலீஜா, அங்கிருந்து உள்ளூரை சேர்ந்த ஜீவன் என்பவரின் துணையுடன் இந்திய எல்லைக்குள் வர முயற்சித்திருக்கிறார். இவருடன் அகமதுவின் சகோதரர் மஹ்மூத் என்பவரும் உடன் இருந்திருக்கிறார். அப்போது, SSB (Sashastra Seema Bal) அதிகாரிகள் இவர்களை பார்த்திருக்கின்றனர்.
இந்தியாவுக்குள் நுழைய முயன்ற மூவரையும் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் விபரத்தை கூறவே அதிகாரிகள் திகைத்துப்போயிருக்கிறார்கள். இதனையடுத்து, அவர்களிடம் பயண ஆவணங்கள் இருக்கிறதா? என்பதை அதிகாரிகள் பரிசோதிக்கும் போது, அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. கலீஜா போலியான ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருந்திருக்கிறார். இதனையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
கைது
இதுகுறித்து பேசிய சீதாமர்ஹி பகுதியின் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹர்கிஷோர் ராய்,"அந்தப் பெண் அகமது என்ற ஆணை காதலித்து வந்திருக்கிறார். அவர் போலி ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களின் உதவியுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்றார். அவர் முதலில் காத்மாண்டுவை அடைந்து, பின்னர் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் உதவியுடன் ஹைதராபாத்தில் வசிக்கும் தனது காதலனைச் சந்திக்க முயற்சித்திருக்கிறார்" என்றார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர். முதலில், அந்த பெண் தனது உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பது போல சந்தேகம் அடைந்ததாகவும் அதன் பின்னர் நடத்திய விசாரணையில் உண்மை தெரியவந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்