பூமிக்கடியில 15 ஆயிரம் டன்-க்கும் அதிகமா இருக்கு.. இந்தியாவுக்கே அடிச்ச ஜாக்பாட்.. மத்திய அரசின் அசத்தல் முடிவு.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் 15,000 டன்னுக்கும் அதிகமாக யுரேனிய தாது இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
யுரேனியம்
கதிரியக்க தனிமமான யுரேனியம் அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி ஆயுதங்கள் தயாரிப்பிலும் யுரேனியம் முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 15 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக யுரேனிய தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் யுரேனிய உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று மக்களவையில் இந்தியாவில் உள்ள யுரேனிய தாதுக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்,"ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டங்களில் 15,631 டன் யுரேனிய தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவற்றை எடுக்க ஆகும் செலவு, சுற்றுப்புற சூழலில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்தும் ஆராய வேண்டியிருக்கிறது" என்றார்.
திட்டம்
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள யுரேனிய தாதுக்களை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்காக யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) மூலம் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவதற்குத் தேவையான பணிகள் நடைபெற்று வருவதாக ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநில அரசு UCIL நிறுவனத்திற்கு சுரங்க குத்தகையை வழங்குவதற்கான கடிதத்தை (LOI) வெளியிட்டுள்ளது.
மொத்த எடை
மக்களவையில் அமைச்சர் பகிர்ந்த தகவலின்படி, அணு கனிமங்கள் இயக்குநரகம் (AMD) சிகார் மாவட்டத்தில் உள்ள ரோஹில் பகுதியில் 8,813 டன், ரோஹில் மேற்கு பகுதியில் 1,086 டன், ஜஹாஸில் 3,570 டன் மற்றும் கெர்ஹானியில் 1,002 டன் யுரேனியம் ஆக்சைடு படிவுகளைக் கண்டறிந்துள்ளது. அதேபோல, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள உம்ராவில், 1,160 டன் அளவுக்கு யுரேனியம் ஆக்சைடு படிவுகளை AMD கண்டறிந்துள்ளது. ராஜஸ்தானில் காணப்படும் யுரேனிய தாதுக்களின் மொத்த அளவு 15,631 டன் ஆகும். இதில் சிகார் மாவட்டத்தில் 14,471 டன் மற்றும் உதய்பூரில் 1,160 டன் யுரேனியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஜார்கண்ட், மேகாலயா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆகிய மாநிலங்களின் 47 இடங்களில் யுரேனிய தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள யுரேனிய தாதுக்களின் அளவு 3,82,675 டன் ஆகும். இருப்பினும் ஜார்கண்ட் மற்றும் ஆந்திராவின் சில இடங்களில் மட்டும் யுரேனியம் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்