1 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சுஷோவன் மறைவு.. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி..கலங்கிப்போன பொதுமக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு ருபாய் டாக்டர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மருத்துவர் சுஷோவன் பானர்ஜி இன்று காலமானார். இதனையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுஷோவன் பானர்ஜி. இவர் கடந்த 60 ஆண்டுகளாக பொது மக்களுக்கு 1 ரூபாயில் மருத்துவம் பார்த்து வந்தார். இவர் 1984 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் போல்பூர் தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளித்துவந்த இவருக்கு மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ வழங்கி கவுரப்படுத்தியது. அதே ஆண்டு, அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக கின்னஸ் உலக சாதனையில் அவரது பெயர் இடம்பெற்றது.
இந்நிலையில், இன்று சுஷோவன் மறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சுஷோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
பரந்த உள்ளம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"டாக்டர். சுஷோவன் பந்தோபாத்யாய் சிறந்த மனிதராக அறியப்பட்டவர். அவர் பலரைக் குணப்படுத்திய அன்பான மற்றும் பெரிய இதயமுள்ள நபராக என்றென்றும் நினைவுகூரப்படுவார். பத்ம விருது வழங்கும் விழாவில் அவருடன் நான் உரையாடியதை நினைவு கூர்ந்தேன். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"மருத்துவர் சுஷோவன் பந்தோபாத்யாயின் மறைவு அறிந்து வருத்தம் அடைந்தேன். பீர்பூமின் புகழ்பெற்ற ஒரு ரூபாய்-மருத்துவர் தனது பொதுநலம் கொண்ட சேவைக்காக அறியப்பட்டவர். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் மக்களிடையே அன்பாக பழக்கூடியவரான சுஷோவனின் மறைவு பொதுமக்களை பெரும் துயரில் ஆழத்தியுள்ளது.
மற்ற செய்திகள்