திருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சமீபமாகவே திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் மதம் தொடர்பான பிரச்சனை இருந்துவருகிறது. கடந்த வாரம் இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆந்திர தலைமைச் செயலாளர் எல்.வி.சுப்ரமணியம், தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் கண்டிப்பாக பணியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தில் மொத்தமாக 48 இந்து அல்லாத ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் அரசுப் பேருந்தின் பயணச்சீட்டில் ஹஜ், ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான விளம்பரம் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.