"வெயிட் பண்ணுங்க.. ஒரு ஆள் உள்ள இருக்காரு".. இரட்டை கோபுர தகர்ப்பின் இறுதிக்கட்டத்தில் ஒலித்த அலாரம்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநொய்டாவில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட இரட்டை கோபுரத்தை நேற்று அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இதன் இறுதிகட்ட பணிகளின்போது அருகில் உள்ள வளாகத்தில் ஒருவர் எச்சரிக்கையையும் மீறி இருந்ததை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இரட்டை கோபுரம்
நொய்டாவின் முக்கிய பகுதியான 93ஏ செக்டாரில் இருக்கும் இந்த சூப்பர் டெக் இரட்டை கட்டிம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடவில்லை என இந்த கட்டிட உரிமையாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் டெக் இரட்டை கட்டிடத்தை இடிக்குமாறு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி வெளிவந்த தீர்ப்பில், '3 மாதங்களுக்குள் கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் ஆகஸ்டு 28 ஆம் தேதி (நேற்று) இந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
இறுதிக்கட்ட பணிகள்
இந்நிலையில், நேற்று மதியம் 2.30 மணிக்கு இந்த கட்டிடம் 3700 கிலோ வெடிமருந்தின் துணையோடு இடிக்கப்பட்டது. முன்னதாக காலை 7 மணிக்கு இரட்டை கோபுரம் அமைந்துள்ள கட்டிடத்துக்கு அருகே உள்ள 15 டவர்களில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் தங்கியிருந்த 2500 குடியிருப்பாளர்கள் மற்றும் 1200 வாகனங்கள் வெளியேற்றப்படுவதை கண்காணிக்க 15 பேர்கொண்ட குழு பணியாற்றியது. அதன்பின்னர் கட்டிடங்களில் யாரும் இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க மீண்டும் அதிகாரிகள் இறங்கியபோது, ஒரு கட்டிடத்தில் நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து அவர் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் எழுப்பப்பட்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
காலி செய்யப்பட்ட கட்டிடங்களில் ஒருவர் இருப்பதை அறிந்த பாதுகாப்பு குழுவினர் உடனடியாக அலாரத்தை ஒலிக்க செய்திருக்கின்றனர். இதனால் அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதியம் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் கட்டிடம் இடிக்கப்பட்டது.
மற்ற செய்திகள்