கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக பள்ளி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர். ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும்" என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே முஸ்லீம் மாணவிகளுக்கு எதிராக சில மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தையும் மாணவிகளுக்கு ஆதரவாக சிலர் ஜெய்பீம் முழக்கத்தையும் எழுப்பியது சர்ச்சையானது. அதேபோல, மாணவர் ஒருவர் தேசியக்கொடி பறக்கும் கம்பத்தில் காவி கொடியை பறக்கவிட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது.
வழக்கு
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மாணவிகள் ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, "கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது" என நீதிபதி தெரிவித்தார். மேலும், "ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான அமர்வு விசாரிக்கும்" என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
3 நீதிபதிகள்
இந்த வழக்கின் மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டனர்.
ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிவது அடிப்படை உரிமைகளுக்கு கீழ் வருகிறதா? ஹிஜாப் அணிவது (இஸ்லாமிய) மத நடைமுறையில் இன்றியமையாததா? என்பவை குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளை திறக்கும்படியும் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரையில் கல்வி வளாகங்களில் மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது எனவும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை துவங்கி நடைபெற இருக்கிறது. இதனையடுத்து திங்கட்கிழமை முதல் கர்நாடகாவில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் எனத் தெரிகிறது.
மற்ற செய்திகள்