வறுமை கோட்டுக்குக் கீழ் ‘இத்தனை’ சதவிகிதம் பேரா? இந்தியாவின் ஏழை மாநிலங்கள் பட்டியல்… தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் ஏழை மாநிலங்களின் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வறுமை கோட்டுக்குக் கீழ் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கின்றனர் என்பது குறித்தும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் ஏழை மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் பிஹார் உள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் 51.91 சதவிகிதம் பேர் ஏழைகள் ஆக உள்ளனர். இரண்டாவது இடத்தில் ஜார்கண்ட் மாநிலம் உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் 42.16 சதவிகிதம் பேர் ஏழைகள் ஆக வாழ்ந்து வருகிறார்கள் என நிதி ஆயோக் ஆய்வுப் பட்டியல் கூறுகிறது.
மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேச மாநிலம் இடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 37.79 சதவிகிதம் பேர் வறுமையில் தவித்து வருகின்றனர். பட்டியலில் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் முறையே மத்தியபிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் 36.65 சதவிகிதம் பேரும் மேகாலயா மாநிலத்தில் 32.67 சதவிகிதம் பேரும் ஏழைகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தப் பட்டியலில் கடைசி ஐந்து இடங்கள் என்பது வறுமை குறைவாக இருக்கும் மாநிலங்கள். அதிலும் கடைசி இடத்தை கேரள மாநிலம் பிடித்துள்ளது. இங்கு 0.71 சதவிகிதம் பேர் தான் ஏழைகளாகக் கருதப்படுகிறார்கள். முறையில் கடைசியில் இருந்து வந்தால் கேரளா, கோவா, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த ஐந்து மாநிலங்களில் வறுமையில் தவிப்பவர்கள் குறைவாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் 4.89 சதவிகிதம் பேர் வறுமை கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். கோவா (3.76 சதவிகிதம்), சிக்கிம் (3.82 சதவிகிதம்), பஞ்சாப் (5.59 சதவிகிதம்) என வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலை மாநில வாரியாக வெளியிட்டுள்ளது நிதி ஆயோக். இந்தப் பட்டியல் 12 காரணிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியம், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இறப்பு விகிதம், பேறுகால வசதி, பள்ளிப்படிப்புக் கால அளவு, பள்ளிகளில் வருகைப்பதிவு, சமையல் எரிவாயு, சுகாதாரம், குடிநீர், மின்சார வசதி, வீட்டு வசதி, வங்கிக் கணக்குகள் என இவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்து ஏழை மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்