‘கொரோனா யுத்தம்’!.. அடுத்த ‘100 நாள்’ ரொம்ப கவனமாக இருக்கணும்.. டாக்டர் வி.கே.பால் எச்சரிக்க காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானவை என கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவர் வி.கே.பால் எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட, இரண்டாம் அலையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. இதுவரை இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான குழுவுக்கு தலைவராக உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி நியமிக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேவேளையில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் குறையும் விகிதம் படிப்படியாக சரிந்து வருகிறது. அதனால் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான காலகட்டம்’ என வி.கே.பால் எச்சரிக்கை செய்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ICMR ஆய்வின்படி, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுள்ளனர். அதேபோல் ஒரு டோஸ் போட்டவர்களில் இறப்பு விகிதம் 82 சதவீதம் குறைந்துள்ளது.
ஜூலை மாதத்துக்குள் 50 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தவது என்ற இலக்குடன் முன்னேறி வருகிறோம். அதனால் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என வி.கே.பால் கூறியுள்ளார். அடுத்த சில மாதங்களில் கொரோனா 3-வது அலை ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்