‘வெளிநாடு’ வாழ் ‘இந்தியர்களுக்கு’ வருமான வரியில் ‘மாற்றம்?’... ‘நிதியமைச்சர்’ நிர்மலா சீதாராமன் ‘விளக்கம்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வருமான வரி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் எந்த நாட்டிலும் வரி செலுத்தாத பட்சத்தில் அவர் இந்தியாவில் வசிப்பவராகக் கருதப்பட்டு அவருக்கு வருமான வரி விதிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெளிநாடு இந்தியர் ஒருவர் இந்தியாவில் ஈட்டும் வருமானத்திற்கு மட்டுமே இங்கு வரி விதிக்கப்படும். வெளிநாடுகளிலோ அல்லது வரி வரம்பு இல்லாத பகுதிகளிலோ அவர் ஈட்டும் வருமானத்திற்கு இங்கு வரி விதிக்கப்படாது. வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்கு இந்தியாவில் ஒரு சொத்து இருந்து அதன்மூலம் அவருக்கு வாடகை போன்ற வருமானம் வந்தால் அதற்கு இங்கேயோ அல்லது அங்கேயோ அவர் வரி செலுத்தாமல் இருக்கிறார். அந்த சொத்து இந்தியாவில் இருக்கும் பட்சத்தில் அதற்கான வரி வசூலிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் இந்தியாவில் வசிப்பவராக கருதப்பட்டு வரி வசூலிக்க வகை செய்யும் 182 நாட்கள் தங்கியிருக்கும் காலத்தை 120 நாட்களாக குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வருமான வரிச்சட்டம் 1961ன் 6வது பிரிவில் திருத்தம் கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பதாகவும், அவர்களில் பலர் தங்கள் குடும்ப விவகாரங்களுக்காக சொந்த ஊர் வந்து செல்வதாகவும் கூறியுள்ள அவர் இந்த சட்ட திருத்தம் அவர்களை மிகவும் பாதிக்கும் எனவும் தெரிவித்து உள்ளார். அத்துடன் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் அவர்கள் இடம் மாறுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.