Dating App-ல் கேரள பெண்ணுக்கு காதல் வலை.. டெல்லியில் சிக்கிய நைஜீரியா இளைஞர்.. அடுத்து வெளியவந்த அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடேட்டிங் ஆஃப் மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி நைஜீரியா இளைஞர் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா நாட்டை சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (வயது 36) என்ற இளைஞருக்கு டேட்டிங் ஆஃப் மூலம் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம் பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது ஆசையாக பேசிய அவர் அப்பெண்ணை காதலிப்பதாக கூறி அவரின் குடும்ப விவரங்களை கேட்டுள்ளார்.
இதனை அடுத்து தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும், இந்தியா வரும்போது உனக்காக கொண்டு வருகிறேன் என்றும் கூறி ஆசையை தூண்டியுள்ளார். இந்த சூழலில், சில வாரங்களுக்கு முன்பு தான் டெல்லி வந்து இருப்பதாகவும், 1.50 கோடி ரூபாய் பணம் எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் இந்த பணத்தை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என்றும், அதை பெற வேண்டுமென்றால் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் அப்பெண்ணிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அப்பெண்ணும் உடனடியாக அவர் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 11 லட்ச ரூபாய் வேண்டும் என அந்த இளைஞர் கேட்கவும், சற்றும் யோசிக்காமல் அப்பெண் வங்கிக்கு சென்று பணத்தை அனுப்ப முயன்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த வங்கி அதிகாரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை விசாரித்ததில் விஷயம் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து டெல்லி போலீசாரிடம் இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள விடுதி அறையில் எடுத்து தங்கியபடியே அந்த நைஜீரிய இளைஞர் கேரள பெண்ணிடம் பேசி பணத்தை பறித்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள போலீசார் டெல்லி விரைந்து அந்த இளைஞரை கைது செய்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் எனுகா அரின்சி எபெனா தனது குடும்பத்துடன் டெல்லியில் முகாமிட்டுள்ளது தெரியவந்தது. இவர்கள் இதேபோல் டேட்டிங் ஆஃப் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அந்த இளைஞரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்